Friday, May 17, 2024

Varshangalkku Shesham Movie Review: மலையாள சினிமாவின் மல்டிஸ்டாரர் காம்போ; நிவின் பாலியின் கேமியோ!

- Advertisement -

இரண்டாம் பாதி முழுவதுமே எளிதில் யூகிக்கும்படியாக, அதீத செயற்கைத்தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. நிவின் பாலியின் கதாபாத்திரம் இக்குறைகளை மறைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே இன்றி, சரி செய்யப் பயன்படவில்லை என்பது கூடுதல் சோகம்!

1970களில் கேரளாவின் கண்ணூரில் உள்ள கிராமம் ஒன்றில், நாடகம் மற்றும் இலக்கியத்தில் ஆர்வமும் திறமையும் உள்ளவனாக இருக்கிறார் வேணு கூத்துபறம்பு. அவனுடைய கிராமத்தில் நடக்கும் மேடை நாடகத்திற்குப் பின்னணி இசைக்க வரும் முரளியுடன் நட்பாகிறார். எழுத்து திறமையுள்ள வேணுவும் இசை திறமையுள்ள முரளியும் சினிமாவில் ஜெயிக்க மெட்ராஸிற்குப் போகிறார்கள். அன்றிலிருந்து, முதுமை வரையிலான இருவரின் 50 ஆண்டுக்கால வாழ்வில் கோடம்பாக்கம் எனும் சினிமா உலகம் விதைக்கும் மகிழ்ச்சி, நம்பிக்கை, தோல்வி, அழிவு, குற்றவுணர்வு என எல்லா உணர்வுகளையும் பேசுகிறது வினீத் ஸ்ரீனிவாசனின் `வர்ஷங்ஙள்க்கு சேஷம்’ எனும் மலையாளத் திரைப்படம்.

- Advertisement -

varshangalkku shesham movie review 2 -

- Advertisement -

பெரும் கனவுகளைக் கொண்ட துடிப்பான இளைஞன், திடீர் புகழால் தலைக்கேறும் போதை, வீழ்ச்சி தரும் பக்குவம், குற்றவுணர்வு தரும் வலி என ஒரு சராசரி மனிதனின் பயணத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் வேணுவாக வரும் தயான் ஸ்ரீனிவாசன். முதுமையான கதாபாத்திரத்தின் உடல்மொழியில் அவர் காட்டும் நிதானம் அக்கதாபாத்திரத்தை அழுத்தமாக்குகிறது. கொண்டாட்டமான இளைஞனாக வந்து, தோல்வியின் பிடியில் சிக்கி, ஞானத்தை எட்டும் முரளியாக பிரனவ் மோகன்லால் குறை சொல்லமுடியாத நடிப்பு. முதற்பாதியில் அவர் கொண்டு வர முயலும் தேஜஸ் ரசிக்க வைக்கிறது. ஆங்காங்கே அவரின் தந்தை மோகன்லாலின் சாயல் எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், அது படத்தில் பெரிய குறையாக இல்லை.

சேட்டை, குறும்பு, அப்பாவித்தனம் என நிதின் மோலியாக நிவின் பாலி அட்டகாசம் செய்திருக்கிறார். கடைசி ஒரு மணிநேரத்தை ரணகளமாக மாற்றுவது அவரின் அடிபொலி பர்பாமன்ஸ்தான்! அஜு வர்க்கீஸ், ஒய்.ஜி.மகேந்திரன், பசில் ஜோசப் ஆகியோர் கொடுக்கப்பட்ட பணியைத் தாண்டி தங்களுடைய நடிப்பால் நம் மனதில் நிற்கிறார்கள். கல்யாணி பிரியதர்ஷன், நீடா பிள்ளை, இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர் ஷான் ரகுமான், காலேஷ் ராமானந்து ஆகியோர் நடிப்பில் குறையேதுமில்லை.

முதற்பாதியின் திரைமொழிக்கு தன் நேர்த்தியான ஒளியமைப்பால் வலுசேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் ஒடுக்கத்தில். முக்கியமாக, இரவு நேரக் கிராமத்தின் அழகைக் கச்சிதமாகத் திரையில் ஏற்றியிருக்கிறார். ரஞ்சன் ஆப்ரஹாமின் படத்தொகுப்பு முதற்பாதியின் வேகத்தைச் சுவாரஸ்யமாக மாற்ற உதவியிருக்கிறது. அம்ரித் ராம்நாத் இசையில் படத்தின் திரையோட்டத்தோடு பாடல்கள் வந்து போகின்றன. அவற்றில், அம்ரித் ராம்நாத், சிந்தூரா ஜிஷ்னு குரலில் வரும் ‘ஞாபகம் மோதுதே’ பாடல் மட்டும் வெவ்வேறு தருணங்களில் வந்து, ஆழமாக உணர்வுகளைக் கடத்துகிறது. தன் பின்னணி இசையாலும் படத்திற்குத் தேவையான ஆன்மாவைக் கொண்டுவந்திருக்கிறார் அம்ரித். கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, ஒப்பனை ஆகியவற்றின் உழைப்பை, முதற்பாதியின் வெற்றியில் உணர முடிகிறது.

Varshangalkku Shesham Movie Review: மலையாள சினிமாவின் மல்டிஸ்டாரர் காம்போ; நிவின் பாலியின் கேமியோ!
Varshangalkku Shesham Movie Review: மலையாள சினிமாவின் மல்டிஸ்டாரர் காம்போ; நிவின் பாலியின் கேமியோ!

இரண்டு இளைஞர்களின் அறிமுகம், நட்பு, பரஸ்பர அன்பு, எழுச்சி, வீழ்ச்சி என முதற்பாதியே ஒரு நீண்ட வாழ்க்கையைப் பார்த்த உணர்வைத் தருகிறது என்றாலும், அட்டகாசமான மேக்கிங், நேர்த்தியான நடிப்பு, வலுவான கதாபாத்திரங்கள் என எங்குமே தொய்வில்லாமல் நம்மை ரசிக்கவும் வைக்கிறது. எம்.ஜி.ஆர், இயக்குநர் பத்மராஜன், அடூர் பாஸி, ப்ரேம் நசீர், ரஜினிகாந்த், கோடம்பாக்கம் உலகம் எனப் பல நாஸ்டால்ஜிக் விஷயங்கள் சுவாரஸ்யத்தைத் தருகின்றன. ஆனால் இரண்டு நண்பர்கள் பிரியும் காரணத்தைத்தான் முழுமையாக ஏற்றக்கொள்ள முடியவில்லை. இன்னும் நம்பகத்தன்மையுடைய காட்சிகளால் இக்குறையைச் சரி செய்திருக்கலாம்.

‘உணர்வு குவியலுக்கிடையே கொஞ்சம் காமெடிகள்’ என முதற்பாதியில் நகர்ந்த திரைக்கதை, ‘காமெடிகளுக்கு இடையே கொஞ்சம் உணர்வுகள்’ என்பதாக இரண்டாம் பாதியில் வேறு டிராக்கில் பயணம் செய்கிறது. நிவின் பாலி, அஜு வர்கீஸ், பாசில் ஜோஸப் ஆகியோரின் வருகைக்குப் பின் படம் பக்கா காமெடி பொழுதுபோக்கு படமாக மாற முயல்கிறது. நிவின் பாலியின் கதாபாத்திரத்தின் விவரிப்புகள், அவர் செய்யும் சேட்டைகள், ஒன்லைனர்கள் எனச் சிரிப்பிற்கு கேரன்டி தருகிறது இந்தப் பகுதி. இப்படியொரு பாத்திரத்தை ஏற்று நடித்த நிவினுக்குக் கூடுதல் ‘பிரேமம்’ பார்சல்!

மறுபுறம், முதியவர்களான வேணு, முரளியின் இருப்பும், அவர்களுக்கிடையே உணர்வுகளும் படத்தை முதல் பாதியைப் போலவே உணர்வுபூர்வமான ஒன்றாக மாற்ற ரொம்பவே போராடுகின்றன. முதற்பாதியில் அழுத்தமாகக் கட்டமைக்கப்பட்ட கதாபாத்திரங்களையும், தருணங்களையும் இரண்டாம் பாதியில் ஆங்காங்கே நினைவூட்டி, இதையும் ஆழமாக்க முயல்கிறார்கள். ஆனால் அதில் பாதி வெற்றியே கிட்டியிருக்கிறது. முதியவராக தயான் ஸ்கோர் செய்யும் அளவிற்கு, பிரணவ் ஸ்கோர் செய்யவில்லை. அதற்கு மேக்கப்பும் ஒரு காரணம்!

இரண்டாம் பாதி முழுவதுமே எளிதில் யூகிக்கும்படியாக, அதீத செயற்கைத்தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. இது காமெடி காட்சிகளுக்கு மட்டுமே ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றது. நிவின் பாலியின் கதாபாத்திரம் இக்குறைகளை எல்லாம் மறைக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறதே இன்றி, மேம்போக்கான திரைக்கதையைச் சரி செய்யப் பயன்படவில்லை என்பது கூடுதல் சோகம்!

இரண்டு வெவ்வேறு ட்ரீட்மென்ட்களில் கையாளப்பட்டுள்ள முதற்பாதியும் இரண்டாம் பாதியும் சரியான முறையில் இணைக்கப்படாததால், இரண்டு வெவ்வேறு படங்களைப் பார்த்த உணர்வு மட்டுமே மிஞ்சுகிறது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Top 5 This Week

Related Posts

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link