
சன் தொலைக்காட்சி புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்றை களமிறங்கியுள்ளது. டாப் குக் டூப் கூக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சில நாட்களுக்கு முன் வெளியானது. அந்த ப்ரோமோவை பார்த்த அனைவருக்கும் முதலில் வந்த கேள்வி ஒன்று தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆரம்பிச்சுருக்காங்களோ? இது தான் அனைவரின் கேள்வியாகவும் இருந்தது.
ஏனென்றால் குக் வித் கோமாளியின் அதே கான்செப்ட் தான் இங்கேயும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய வெங்கடேஷ் பட் தான் இந்த டாப் குக் டூப் கூக் நிகழ்ச்சியின் நடுவர். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்ற மோனிஷா, அதிர்ச்சி அருண், ஜி.பி. முத்து, பரத் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், வரும் வாரம் முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள டாப் குக் டூப் கூக் பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிலையில், போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை சோனியா அகர்வால், நடிகர் தீனா, வில்லன் நடிகர் விஜயன், ஷிவாங்கியின் தாயும் பின்னணி பாடகியான பின்னி கிருஷ்ணகுமார், நடிகை சுஜாதா சிவகுமார், நடிகை ஐஸ்வர்யா தத்தா, சின்னத்திரை பிரபலம் சைத்ரா ரெட்டி, ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் சரியான போட்டி என்றும் , எந்த நிகழ்ச்சி சிறப்பாக போகப்போகிறது குக் வித் கோமாளியா அல்லது டாப் குக் டூப் கூக் நிகழ்ச்சியா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.