
உணவே ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம் ஆகும். அதிலும் உணவு தயாரிக்கும் பாத்திரங்கள், உணவு தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாரம்பரியமாகாவே மண் பானை தான் சமையலுக்கு ஏற்றது என்று சொன்னாலும், அலுமினியம், பித்தளை, செம்பு, இரும்பு என பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
வெப்பம் கடத்தும் திறனை அதிகமாக கொண்டுள்ளதால் மட்டுமல்ல, உணவின் தரத்தையும் ஊட்டச்சத்துக்களையும் மேம்படுத்தும் என்பதால், மண்பானைக்கு அடுத்தபடியாக இரும்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள், கடாய், வாணலி, தோசைக்கல் (Iron Vessels) ஆகியவை சமைப்பதற்கான பாத்திரங்களாக பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
பிற உலோகப் பாத்திரங்களை விட இரும்பு பாத்திரங்களில் சமையல் செய்தால் உணவு ருசி அதிகமாக இருப்பது குக்றிப்பிடத்தக்கது. ஏனெனில், இரும்பு பாத்திரத்தில் சமைத்தால், பாத்திரத்தில் உள்ள இரும்புத் தாதுக்களின் எதிர்வினையால் அதன் தன்மை உணவில் கலந்து, உணவின் இரும்புச்சத்தை அதிகப்படுத்தும் என்பதால், உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, இரும்பு பாத்திரத்தில் சமைத்து உண்பது மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இருந்தபோதிலும், சில உணவுகளை இரும்புப் பாத்திரங்களில் சமைக்கவே கூடாது என்றும், நன்மையே தீமையானதாக மாறும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனென்றால், அமிலத்தன்மை கொண்ட உணவுப்பொருட்களை இரும்புச் சட்டியில் சமைக்கும்போது, இரும்புடன் சேர்ந்து அமிலத்தன்மை எதிர்வினை புரிந்து உணவை நச்சாக மாற்றிவிடும். எனவே, எந்தெந்த பொருட்களை இரும்பு பாத்திரங்களில் சமைக்கக்கூடாது என தெரிந்துக் கொள்வோம்.
கீரை
இரும்புச் சட்டியில் கீரை சமைக்கக்கூடாது. இதற்குக் காரணம், கீரையில் இருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் இரும்புடன் இணைந்து சூடேறும்போது எதிர்வினையாற்றுகிறது. கீரையின் இயற்கையான நிறம் மாறுவதுடன், அவற்றின் அடிப்படையான சத்துக்களும் மாறி உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
முட்டை
முட்டையை வேகவைக்கவோ சமைப்பதற்கோ இரும்புச் சட்டியைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது (Avoid Cooking Egg In Iron Vessel). இதற்குக் காரணம், முட்டையில் இருக்கும் கந்தகம் இரும்புடன் இணைந்து சூடேறும்போது வினைபுரிகிறது. முட்டையின் நிறமும் சுவையும் மோசமடைகிறது. இது தவிர, இரும்பு பாத்திரத்தில் சமைக்கப்பட்ட முட்டையை உண்டால், வயிற்றில் பிரச்சனைகள் உருவாகலாம்.
எலுமிச்சம்பழம்
இரும்பு சட்டியில் எலுமிச்சை சேர்த்து சமைப்பது ஒரு புறம், இரும்பில் எலுமிச்சை ரசம் பட்டாலே அதன் நிறம் மாறிக்விடும். பொதுவாக எலுமிச்சையை காயாகவோ அல்லது தனியாகவோ சமைக்க மாட்டோம் என்றாலும், உணவு தயாரிப்பில் எலுமிச்சை ரசம் சேர்க்கும்போது, அந்த உணவையும், இரும்புச் சட்டியில் செய்ய வேண்டாம். ஏனென்றால், எலுமிச்சையில் உள்ள அமிலம், இரும்பில் பட்டாலே, அது எதிர்வினையாற்றும், உணவின் நிறத்தை மாற்றிவிடும். எலுமிச்சையில் உள்ளஅசிட்டிக் அமிலம் இரும்புடன் வினைபுரிந்து உணவின் சுவையை கெடுத்து, ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும்.
பீட்ரூட்
பீட்ரூட் காயை இரும்பு பாத்திரத்தில் செய்வதை தவிர்க்க வேண்டும் (Avoid Cooking Beetroot In Iron Vessel). பீட்ரூட்டில் இரும்புச்சத்து நிறைந்துள்ள நிலைய்ல், அது இரும்புடன் சேரும்போது அதிக வினையை வெளிப்படுத்தும். இதனால் உணவின் நிறமும் சுவையும் கெட்டுவிடும் என்பதுடன் உடல் நலமும் பாதிக்கப்படும்.
தக்காளி
தக்காளியில் உள்ள டார்டாரிக் அமிலம், இரும்புச் சட்டியில் சமைக்கப்பட்டால், அது எதிர்வினையாற்றும். அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே, இரும்பு பாத்திரத்தில் தக்காளி சேர்த்து உணவு சமைபதைத் தவிர்க்க வேண்டும்.