ஹெபடைடிஸ் A என்பது ஹெபடைடிஸ் A வைரஸால் (HAV)ஏற்படுகின்ற மற்றும் அதிகளவில் பரவக்கூடிய ஒரு கல்லீரல் தொற்றாகும். கல்லீரலில் வைரஸ்களால் ஏற்படும் நோயின் பிற வகைகளைப் போன்று அல்லாமல், ஹெபடைடிஸ் A தீவிரமான கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை; ஆனால், குறிப்பிடத்தக்க உடல்நல பாதிப்பை இது உருவாக்கக்கூடும். அரிதாக கடுமையான கல்லீரல் செயலிழப்பை இது விளைவிக்கலாம்.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 1.4 மில்லியன் நபர்களுக்கு ஹெபடைடிஸ் தொற்று ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO)மதிப்பிட்டிருக்கிறது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 7000 உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது. ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகள் உட்பட, மோசமான துப்புரவு நிலை காணப்படும் பகுதிகளில் இந்த நோய்த்தொற்று மிக அதிகமாக இருக்கிறது.
ஹெபடைடிஸ் ஏ என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, இது எப்படி பரவுகிறது, அதை தடுப்பது எப்படி என்பது குறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் சென்டரின் கல்லீரல் மாற்று மற்றும் HPB அறுவைசிகிச்சை மையத்தின் முதுநிலை மருத்துவர் டாக்டர். கார்த்திக் மதிவாணன் விரிவாக கூறியுள்ளார்.
ஹெபடைடிஸ் A என்றால் என்ன?
ஹெபடைடிஸ் A என்பது, எங்கும் பரவலாக இருக்கக்கூடிய, வைரஸ் சார்ந்த கல்லீரல் தொற்றாகும். ஹெபடைடிஸ் வைரல் தொற்றின் மிகப் பொதுவான வகைகளுள் ஒன்றான இதில் கூடுதலாக ஹெபடைடிஸ் B மற்றும் C இருக்கக்கூடும். இந்த வைரஸ கணிசமான சேதத்துடன் கல்லீரல் வீக்கத்தையும் ஏற்படுத்தலாம். எனினும், இது நீண்டகால அடிப்படையிலான கல்லீரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்காது. ஒருசில வாரங்களில் பெரும்பாலான நபர்கள் இதிலிருந்து முழுமையாக மீண்டு குணமடைந்து விடுவார்கள். எனினும், சிலருக்கு இந்நோயின் தீவிரத்தன்மை மாறுபடக்கூடும்.
ஹெபடைடிஸ் A தொற்றின் அறிகுறிகள்
காய்ச்சல், களைப்பு, பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி, அடிவயிற்றில் வலி அல்லது அசௌகரியம், கருப்பு நிறத்தில் சிறுநீர், வெளிரிய அல்லது களிமண் நிறத்தில் மலம், மூட்டு வலி மற்றும் மஞ்சள் காமாலை (சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருத்தல்) ஆகியவை இத்தொற்றின் அறிகுறிகளாகும்.
ஹெபடைடிஸ் A அறிகுறிகள் மிதமானது முதல் தீவிர நிலைக்கு இடைப்பட்டதாக மாறுபடக்கூடும்; இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு 2 முதல் 6 வார காலஅளவிற்குள் இந்த அறிகுறிகள் பொதுவாக தோன்றக்கூடும். ஆறு வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளுக்கு பெரும்பாலான நேரங்களில் ஹெபடைடிஸ் A தொற்று அறிகுறி தெரியாமல் இருக்கலாம் அல்லது எளிதாக புறக்கணிக்கும் வகையில் லேசான அறிகுறிகளாக வெளிப்படலாம். எனினும், வயதுவந்த பெரியவர்களுக்கு கடுமையான அறிகுறிகளும், சிக்கல்களும் வெளிப்படுவதற்கு அதிக சாத்தியமுண்டு
இது எவ்வாறு பரவுகிறது?
1. தூய்மை இல்லாத பகுதிகளில் இது பொதுவாக நிகழ்கிறது. மாசுபட்ட நீர், சரியான அளவை விட குறைவாக வேக வைக்கப்படுகின்ற / சமைக்கப்படுகின்ற அல்லது வேக வைக்கப்படாத பச்சையான கடல் உணவுகளில் இந்த வைரஸ் இருக்கும்.
2. அதிக அளவில் ஹெபடைடிஸ் A காணப்படும் இடங்களுக்குப் பயணிப்பது, தூய்மையில்லாத இடங்களுக்கு செல்வது போன்றவை இத்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
3. கழிப்பறையை பயன்படுத்திய பிறகு அல்லது டயாப்பர்களை மாற்றிய பிறகு கைகளை சோப்பு / ஹேண்ட் வாஷ் கொண்டு கழுவாமல் இருப்பது.
ஹெபடைடிஸ் A வராமல் தடுப்பது எப்படி?
ஹெபடைடிஸ் A வராமல் தடுப்பதில் பல வழிமுறைகளும், உத்திகளும் இருக்கின்றன. அதில் தடுப்பூசி போடுவது, முறையான தூய்மை பழக்கங்களைப் பின்பற்றுவது, பாதுகாப்பான உணவு மற்றும் தூய்மையான நீரை அருந்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
1. தடுப்பூசி:
ஹெபடைடிஸ் A தடுப்பூசி அதிக அளவு திறம்பட செயல்படக்கூடியது. இத்தொற்று வராமல் தடுப்பதற்கு இதுவே மிகச்சிறந்த வழிமுறை. ஒரு வயதிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும், அதிக இடர்வாய்ப்புள்ள பகுதிகளுக்கு செல்பவர்களுக்கும் தீவிர கல்லீரல் நோய் பாதிப்புள்ள நபர்களுக்கும் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை அல்லது பணி / தொழிலின் காரணமாக, அதிக ஆபத்துள்ள நபர்களுக்கும் இந்த தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
2. சிறந்த தூய்மை பராமரிப்பு நடைமுறைகள்:
சோப்பு மற்றும் நீரைக் கொண்டு அடிக்கடி கைகளை கழுவுவது அவசியம். அதுவும் குறிப்பாக, கழிப்பறையை பயன்படுத்தியதற்குப் பிறகு, டயாப்பர்களை மாற்றிய பிறகு மற்றும் உணவை தயாரிப்பதற்கு முன்பு அல்லது உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவுவது இந்த அபாயத்தை கணிசமாக குறைக்கக்கூடும்.
3. பாதுகாப்பான உணவு மற்றும் நீர்:
உணவு முறையாக/நன்றாக சமைக்கப்பட்ட மற்றும் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே உண்ண வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட, பாட்டிலில் அடைக்கப்பட்ட அல்லது கொதிக்க வைக்கப்பட்ட நீரை அருந்த வேண்டும். மீன்கள் மற்றும் பிற கடல் உணவுகளை சமைக்காமல் உண்பதை அல்லது சரியாக வேக வைக்காமல் உண்பதை தவிர்க்கவும். ஏனெனில், இவைகள் மாசுபட்டதாக இருக்கக்கூடும்.
4. துப்புரவு மேம்பாடுகள்:
வளர்ச்சியடைந்து வருகின்ற பிராந்தியங்களில் துப்புரவு வசதிகளையும், கழிவு அகற்றல் அமைப்புகளையும் மேம்படுத்துவது ஹெபடைடிஸ் A தொற்றுப்பரவல் நிகழ்வை குறைக்கக்கூடும்.
ஹெபடைடிஸ் A என்பது, தடுப்பூசி போடுதல், முறையான தூய்மை நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பான உணவு / நீர் அருந்தும் பழக்கவழக்கங்கள் மூலம் தடுக்கக்கூடிய நோயாகவே இருக்கிறது. இத்தொற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பரவல் வழிமுறைகள் பற்றி சரியாக புரிந்திருப்பது, இதன் பரவலை குறைப்பதற்கும், பொது சுகாதாரத்தைப் பேணுவதற்கும் மிக முக்கியமானது. மேற்குறிப்பிடப்பட்ட முன்தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஹெபடைடிஸ் A தொற்று வருவதற்கான ஆபத்தையும் மற்றும் அதை பிறருக்கு பரவச்செய்யும் வாய்ப்பையும் நம்மால் கணிசமாக குறைக்க முடியும்.