மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் ஹீரோயினாக நடித்த அதிதிராவ் ஹைத்ரி மீண்டும் அவர் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி அதிதிராவ் கூறியது: செக்க சிவந்த வானம் படத்தில் நிறைய ஹீரோக்கள் ஒன்றிணைந்து நடிக்கின்றனர். அதேசமயம் எல்லா கதாபாத் திரங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. காற்று வெளியிடை படத்தைப்போலவே இப்படத்திலும் எனக்கு அழுத்தமான கதாபாத்திரம்.
அந்த வேடத்தை எப்படி உள்வாங்கி நடிப்பது என்பதை மிகவும் கூர்மையாக கவனித்து நடித்து வருகிறேன். இயக்குனர் மணிரத்னம் சொல்லும் ஒவ்வொரு சிறு அசைவிலான நடிப்பிலும் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதால் அவர் சொல்வதை அப்படியே கிரகித்துக்கொண்டு நடிப்பேன். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மணிரத்னம் மிகவும் கண்டிப்பானவராகவே இருப்பார்.
நடிகர், நடிகைகள் யாராக இருந்தாலும் தான் எதிர்பார்த்தபடி நடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். அவர் நினைத்தபடி காட்சி வராவிட்டால் மிகவும் கண்டிப்பு காட்டுவார். என்னை அவர் கண்டித்த தருணங்களும் உண்டு. ஒரு கட்டத்தில் அந்த கதாபாத்திரமாகவே நம்மை மாறச் செய்துவிடுவார். அதனால் நடிப்பின் மீது இன்னும் ஆர்வம் அதிகரிக்கும். இவ்வாறு அதிதிராவ் ஹைத்ரி கூறினார்.



