தமிழ் திரையுலகில் பல வருடங்களாக சிங்கிள் சிங்கமாக சுற்றித்திறிந்தவர், பிரேம்ஜி. பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரர் ஆன இவர், அவரது அனைத்து படங்களிலும் தவறாமல் இடம் பெற்று விடுவார். அது மட்டுமன்றி பல பெரிய ஹீரோக்களின் படங்களில் துணை நடிகராகவும் பாடகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிரேம்ஜிக்கு திருமணம்!
“பிரேம்ஜிக்கு திருமணம்” என்று கேட்டவுடன் ரசிகர்கள் பலர் கொஞ்சம் ஆடித்தான் போயினர். காரணம், இவருக்கு காதலும் கைகூடவில்லை, வீட்டில் பார்க்கும் பெண்களும் அமையவில்லை என்பது உலகறிந்த கதை. ஆனால், இந்த வருடம் அதிசயத்திற்கு மேல் அதிசயமாக நிகழ்ந்து வருகிறது. அதில், முக்கிய அதிசயமாக பிரேம்ஜியின் திருமணம் நடைபெற இருக்கிறது.
இவர், இந்து என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம், வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி திருத்தணியில் நடைபெற உள்ளது. இவர்களின் திருமண பத்த்ரிகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல வருடங்களாக சிங்கிளாக இருந்த இவர், தற்போது 45 வயதில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த வயதில், இவர் இல்வாழ்வில் இணைவதை நினைத்து பலர் வேடிக்கையாக பேசிவந்தாலும், நல்ல மனம் கொண்ட பலர் பிரேம்ஜிக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மணப்பெண் யார்?
சில மாதங்களுக்கு முன்பு, பிரேம்ஜியின் திருமணம் குறித்து அவரது வீட்டுப்பெரியவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், பெண் பார்த்துவிட்டதாக கூறினர். எப்போதும் போல இதுவும் ஜோக்தான் என் பலர் நினைத்துக்கொண்டனர். ஆனால், உண்மையிலேயே அவருக்கு பெண் பார்த்துள்ளனர் என்பது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. இந்த பெண், அவரது சொந்தக்கார பெண்ணாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த திருமணமும், பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் மற்றும் சகோதரர் வெங்கட் பிரபுவின் தலைமையில்தான் நடக்க இருப்பதாக பேசப்படுகிறது.
பிரேம்ஜியின் சினிமா வாழ்க்கை:
சினிமா குடும்பத்தில் இருந்து வந்த பிரேம்ஜி, 1982ஆம் ஆண்டே திரையுலகிற்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் ராப் பாடல்கள், ஆங்கில பாடல்கள் உள்ளிட்டவற்றை பாடி வந்த அவர், விசில், புண்ணகை பூவே உள்ளிட்ட படங்களில் பெயர் தெரியாத கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். வல்லவன் படம்தான் அவரை அனைவரும் கவனித்த முதல் படமாகும். அதன் பிறகு, வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 திரைப்படம் இவருக்கு பெரிய பெயரை தேடித்தந்தது.
தொடர்ந்து தனது சகோதரர் இயக்கிய, கோவா, சரோஜா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் The Greatest Of All Time படத்திலும் இவர் முக்கியமான கதாப்பாத்திரமாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஆக்டிவாக இருந்த பிரேம்ஜி, கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்தார். இப்போதுதான் அதற்கான அர்த்தம் புரிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.