aadi kool seivathu eppadi ஆடிக்கூழ் – அரிசிமா கூழ் செய்வது எப்படி? ஆடிப் பிறப்பன்று இந்த ஆடிக் கூழ் காய்ச்சி கொடுப்பார்கள். ஊரில் இருப்பவர்கள் எல்லாரும் வந்து ஒன்று கூடி கூழ் வாங்கிக் குடிப்பார்கள்.
வீடுகளிலும் இந்த தினங்களில் ஆடிக் கூழுடன், கொழுக்கட்டையும் அவித்து படைத்து உண்பது நடைமுறையில் இருக்கிறது. ஆடி மாதம் சைவ சமயத்தாருக்கு பல வகையான விரத நாட்களையும் , உருத்துகளுக்குரிய நாளான ஆடி அமாவாசையும் கொண்ட மாதம் என்பதால் பல தமிழர்களின் வீடுகளில் ஆடி மாதத்திலிருந்து மச்ச சாப்பாடுகளை தவிர்க்க தொடங்கிவிடுவார்கள்.
அந்த மாதத்திலேயே அம்மன் கோவில்களில் மட்டுமல்ல ஈழத்தின் பல ஆலயங்களின் திருவிழாக்களும் தொடங்குகின்றன. அதுமட்டுமல்ல இந்தக் கூழ் அந்த கோடைக்காலத்தின் சீதோஷ்ண நிலைக்கு மிகவும் அருமையானதாக பொருந்தவும் செய்கிறது. அதனால் தானோ என்னமோ கோவில்களில் ஆடி மாதத்தில் இந்த கூழ் காய்ச்சி வழங்குகிறார்களோ…..

ஆடிக்கூழ் – அரிசிமா கூழ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
- 1 கப் – 200 கிராம் பச்சையரிசி – அரிசியை 3 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து மாவாக இடித்து எடுக்கவும்.
- 150-200 கிராம் பனங்கட்டி
- 1 மேகரண்டி கற்கண்டு
- 2 மேக வறுத்த பயறு ( பாசிப் பருப்பு)
- 11/2 மேகரண்டி வறுத்த உழுத்தம் மா
- 1/2 முடி தேங்காயின் பால்
- சிறிதளவு தேங்காய்ச் சொட்டுக்கள்
- 1 தேகரண்டி மிளகு சீரகத் தூள்
- 3 ஏலக்காய்
- இரு சிட்டிகை உப்பு
செய்முறை:
1 கப் அரிசியை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மாவாக்கி எடுக்கவும். பாதி தேங்காயில் இரு சொட்டுக்கள் – வில்லைகள் வெட்டி எடுத்து அதனை சிறியதாக வெட்டவும். மீதமுள்ள தேங்காயைத் துருவி அதில் இருந்து 1 தம்ளர் முதற்பாலும் 2 தம்ளர் இரண்டாம் பாலும் எடுக்கவும்.
மாவை அரைவாசியாக பிரித்து ஒரு அரைவாசி மாவுடன் ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்துக் கலந்து முதலாம் பாலில் சிறிதளவு சேர்த்து கெட்டியான மாவாக குழைத்து எடுத்து அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
மீதமுள்ள அரைவாசி மாவையும் 11/2 தேகரண்டி. வறுத்த உழுத்தம் மாவையும் ஒன்றாக கலந்து அதனுள் 2 தம்ளர் இரண்டாம் பாலை விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து எடுக்கவும்.
வறுத்த பயறினை 3 தம்ளர் தண்ணீர் விட்டு அவியவிடவும். பயறு அவிந்தவுடன் அதனுடன் உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும்.
பின்பு அதனுள் ஒரு சிட்டிகை உப்பு, பனங்கட்டி, கற்கண்டு இவற்றைச் சேர்த்து காய்ச்சவும். பனங்கட்டி கொதித்துக் கரைந்த பின்பு அதனுள் தேங்காய்ப் பாலில் கரைத்து வைத்த மா, உழுத்தம் மா கரைசல், எஞ்சிய முதற் பால், 1 தேகரண்டி மிளகு சீரகத்தூள், இடித்த ஏலக்காய், வெட்டிய தேங்காய் சொட்டுகள் இவற்றைப்போட்டுக் கலந்து ஓரு கொதி கொதித்த பின்பு கட்டியாக இறுகும் முன்பு அடுப்பு சூட்டில் இருந்து இறக்கி பரிமாறவும்.