மணிரத்னம் இயக்கும் படங்கள் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று கோலிவுட்டில் பேச்சு உண்டு. கடந்த 2 படங்களாக அதாவது ஓகே கண்மணி, காற்று வெளியிடை படங்களை வேகமாக முடித்து ரிலீஸ் செய்ததையடுத்து நீண்ட நாள் படப்பிடிப்பு நடத்தும் இயக்குனர் என்ற பெயரை மாற்றி உள்ளார். அடுத்து, ‘செக்க சிவந்த வானம்’ படத்தை அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய் என 4 ஹீரோக்களை இணைத்து இயக்கி வருகிறார்.
இரண்டு ஹீரோக்கள் படங்களை முடிக்கவே பிரச்னைகள் உருவாகும் சூழலில் 4 ஹீரோவை வைத்து எப்படி படம் முடிக்கப்போகிறாரோ என்ற பேச்சு எழுந்தது. எந்தவித பிரச்னையும் இல்லாமல் 4 ஹீரோக்களும் படப்பிடிப்பில் பங்கேற்று வருவது கோலிவுட்டில் புது உற்சாகத்தை அளித்திருக்கிறது. அதில் அரவிந்த் சாமி நடிக்க வேண்டிய காட்சிகள் முடிக்கப்பட்டுவிட்டது.
இதுபற்றி அரவிந்த்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,‘செக்க சிவந்த வானம் படத்தில் எனது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் பணிபுரிவது இனம் புரியாத சந்தோஷம். ஒட்டுமொத்த படக்குழுவினரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். இப்படம் எனக்கு நிச்சயம் ஒரு ஸ்பெஷல் படமாக இருக்கும் என எண்ணுகிறேன்’ என்றார்.



