பழம்பெரும் நடிகை சாவித்ரி வாழ்க்கை சரித்திரம், ‘நடிகையர் திலகம்’ பெயரில் தமிழிலும், ‘மகாநதி’ பெயரில் தெலுங்கிலும் உருவாகியிருக்கிறது. இப்படம் நாளை திரைக்கு வருகிறது. முன்னதாக இப்படத்தின் முன்னோட்ட காட்சி சாவித்ரி குடும்பத்தினருக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. சாவித்ரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் குடும்பத்தினர் படத்தை பார்க்க வந்திருந்தனர். படம் பார்த்து முடித்த பிறகு விஜய சாமுண்டீஸ்வரி கண்கலங்கினார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே விஜய சாமுண்டீஸ்வரியை நேரில் சந்தித்த கீர்த்தி சுரேஷ், சாவித்ரியின் வழக்கமான பணிகள், அவர் எப்படி பேசுவார், வீட்டில் குடும்பத்தினரிடம் எப்படி பழகுவார் என்பதுபற்றிய விவரங்களை கேட்டு அதன்படியே படத்திலும் நடித்திருக்கிறார். அதை நினைவு கூர்ந்த விஜய சாமுண்டீஸ்வரி, கீர்த்தியின் கையைப்பிடித்து பாராட்டு தெரிவித்தார்.
படம் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு வீடு திரும்பிய சாமுண்டீஸ்வரி, கீர்த்திக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில்,’எப்போதாவது எனக்கு என் தாய் சாவித்ரியின் அரவணைப்பு தேவைப்படும் என்று எண்ணும்போது நேராக உன்னைத்தான் வந்து சந்திப்பேன்’ என குறிப்பிட்டிருந்தார். அந்த மெசேஜை கண்டு கீர்த்தி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.



