நடிகை கஸ்தூரி ஒரு குழந்தைக்கு தாய் ஆக இருக்கிறார். அவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே வருகின்றன. அதேசமயம் இணைய தள பக்கத்தில் ரஜினி, கமல், அரசியல்வாதிகள் எல்லோரையும் சகட்டு மேனிக்கு விமர்சித்து அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகிறார். கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ்படம் படத்தில் கஸ்தூரி குத்தாட்டம் ஆடினார். அதன்பிறகு சில படங்களில் கவர்ச்சி ஆட்டம், குணசித்ர வேடங்களில் நடித்தார். தற்போது தமிழ்படம் 2ம் பாகத்தில் மீண்டும் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.
சமீபத்தில் இதன் டீஸர் வெளியானது. அதைப்பார்த்த ரசிகர்கள், கஸ்தூரியை வம்புக்கு இழுத்துள்ளனர். ‘கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு பொறுப்புள்ள தாய் ஆகிவிட்டீர்கள், இப்போது நீங்கள் கவர்ச்சி குத்தாட்டம் ஆடலாமா?’ என கேட்டிருந்தனர். அதைக்கண்டு கோபம் அடைந்த கஸ்தூரி பதிலடி தந்திருக்கிறார். ‘இதுதான் தமிழ் ரசிகர்கள் குணம். நான் இன்னமும் இளமைதோற்றத்துடன் எனது உடலை பராமரிக்கிறேன்.
அதற்கான பாத்திரம் ஏற்கிறேன். இதில் அம்மா பொறுப்பு, நல்லொழுக்கம் போன்றவை என்ன கெடப்போகிறது. நடிகர்களிடம் இதே கேள்வியை எப்போதாவது நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? குழந்தைகளுக்கு தந்தை ஆன பிறகும் அவர்கள் படங்களில் குடிக்கிறார்கள், கவர்ச்சியாக நடனம் ஆடுகிறார்கள், காதலிக்கிறார்கள். முதலில் அதை கேளுங்கள்’ என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.



