பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஹிட் ஆன ஷோவாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், இதில் இடம் பெற இருக்கும் ஒரு போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 8:
தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தைனயோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இதில், ஒரு சில மட்டும் மக்கள் மத்தியில் ஹிட் ஆகி பல வருடங்களுக்கு நிலைத்து நிற்கின்றன. அது போன்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று, பிக்பாஸ். ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பெயரில் ஆரம்பித்த நிகழ்ச்சியை, இந்தியில் பிக்பாஸ் என்ற பெயரில் ஆரம்பித்தனர். 8 வருடங்களுக்கு முன்னர்தான், இது தமிழ் மொழியில் உருவாக ஆரம்பித்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த 7வது சீசன் வரை நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சி தாெகுப்பாளராக இருந்தார். தற்போது அதிகமான படங்களில் இவர் கமிட் ஆகி இருப்பதால், இனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னால் தொடர முடியாது என்று கூறிவிட்டார். நிர்வாகமும் இவரது முடிவை மதித்து, வேறு ஒரு நடிகரை தொகுப்பாளராக்க முடிவு செய்துள்ளது.
பிக்பாஸ் 8 போட்டியாளர்கள்..
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்த வரை, இதில் நுழையும் போட்டியாளர்கள் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பர். சின்னத்திரை, வெள்ளித்திரை, டிஜிட்டல் திரை என பலதரப்பட்ட துறை சார்ந்தவர்கள் இதில் போட்டியாளர்களாக பங்கேற்பர். அந்த வகையில், இந்த சீசனுக்கான பாேட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைப்பெற்று வருகிறதாம்.
பிக்பாஸ் 8ல் கலந்து கொள்ள இருப்பவர்கள் குறித்த விவரம் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், இதில் இடம் பெற இருக்கும் ஒரு முக்கிய போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
பிரபல சீரியல் நடிகர்..
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைய இருப்பதாக கூறப்படும் இந்த நடிகர், பல்வேறு தமிழ் தொடர்கள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார். தனது சீரியல் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் ஒரு சில தொடர்களில் துணை கதாப்பாத்திரமாக மட்டும் நடித்து வந்தார். தெலுங்கிலும் சில தொடர்களில் நடித்திருக்கிறார். இவரை பெரிதும் பலருக்கு அறிமுகப்படுத்திய தொடர், திருமதி செல்வம். இதில் நெகடிவ் ஷேட் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர், தொடர்ந்து தென்றல் தொடரில் நாயகனாக நடித்து பிரபலமானார். இவர் பெயர், தீபக் டிங்கர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அதே தொலைக்காட்சியில் ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற தொடரும் ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் இவர்தான் நாயகன். இந்த நிலையில், இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் நண்பர்!!
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று, இப்போது டாப் நடிகராக விளங்கி வருபவர், சிவகார்த்திகேயன். இவரும், தீபக் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கின்றனர், தீபக் பங்கேற்றிருந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். இன்றுவரை இவர்களுக்குள் நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. சிவகார்த்திகேயன்-இமான் பிரச்சனையின் போது, இவர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நேர்காணலில் பேசியது வைரலானது.