கோலிவுட் திரையுலகிலேயே, பல ஆண்டுகளாக ‘சிங்கிள் சிங்கமாக’ சுற்றி வரும் நடிகர் சிலம்பரசன். டி.ராஜேந்திரனின் மகனான இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இளமைக்கே ஏற்ற பல சேட்டைகளை செய்தவர். கடந்த சில ஆண்டுகளாக, தனது உடலையும் மனதையும் அமைதிப்படுத்தி, ஒழுக்கமான வாழ்க்கை முறையில் ஈடுபட்டு வருகிறார்.

தொடர் காதல் தோல்விகள்:
சிறு வயதிலேயே தனது தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமன சிம்பு, கொஞ்சம் வளர்ந்த பிறகு நாயகனாக அறிமுகமாகி இளம் நட்சத்திரமாக பல ஆண்டுகள் ஜொலித்தார். துரு துருவென இருக்கும் இளைஞரின் கதாப்பாத்திரத்தில் மட்டும் நடிக்காமல், இயல்பாகவே அது போன்ற கேரக்டராக இருந்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஒவ்வாென்றாக ஹிட் ஆக, இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது.
சிம்பு, முதலில் காதலித்த நடிகை நயன்தாரா. இவர்கள் இருவரும் வல்லவன் படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த சமயத்தில் காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகள் தொடர்ந்த இவர்களின் காதல், பின்னர் பிரேக்-அப்பில் முடிந்தது. இதையடுத்து இவர்கள் ‘இது நம்ம ஆளு’ படத்திலும் ஒன்று சேர்ந்து நடித்தனர். இந்த காதல் தோல்விக்கு பிறகு, சிம்பு வேறு ஒரு நடிகையை காதலித்தார். அவர்தான், ஹன்சிகா மோத்வானி.
ஹன்சிகாவும் சிம்புவும் 2015ஆம் ஆண்டு வெளியான ‘வாலு’ திரைப்படத்தில் ஒன்று சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டது. தங்கள் காதலை யாரிடமிருந்தும் இவர்கள் மறைக்க விரும்பவில்லை. இந்த நிலையில், இந்த காதலும் சில மாதங்களில் பிரேக்-அப்பில் முடிந்தது. இருப்பினும் ஹன்சிகாவிற்காக அவர் நடித்த ‘மஹா’ திரைப்படத்தில் சிம்பு கெஸ்ட் ராேலில் நடித்தார்.
புது காதல்?
நடிகர் சிம்பு, கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்குள் பழைய சிம்புவாக கம்-பேக் கொடுத்தார். அந்த ஆண்டில் வெளியான ‘மாநாடு’ படம்தான் வெற்றி பெற்றது என்றாலும், அவரது வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த இன்னாெரு படம், அதே ஆண்டில் வெளியான ‘ஈஸ்வரன்’. இந்த படத்தில் அவர் நிதி அகர்வாலுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் ஒன்று சேர்ந்து நடித்த போது, இருவரும் காதலில் விழுந்ததாகவும் இப்போது ரகசியமாக இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இருவரும் தங்கள் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு போக தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர்களின் காதலுக்கு, பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. எனவே, இது வெறும் வதந்தியாக முடியவும் வாய்ப்பிருக்கிறது.
நிதானமாக செயல்படும் சிம்பு!
நடிகர் சிம்பு, கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வெயிட் ஏறினார். இதையடுத்து, ஊரடங்கின் போது தனக்கென பர்சனல் டிரைனர் வைத்து பெரும் முயற்சி எடுத்து எடையை குறைத்தார். இது, ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. எந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், எந்த பேட்டியில் கலந்து கொண்டாலும் புரியாத ஒன்றை பேசி கன்டன்ட் ஆகி வந்த இவர், இப்போது தான் பேசுவதிலும் தனது செயல்களிலும் பெரும் கவனம் கொடுத்து, நிதானமாக செயல்பட்டு வருகிறார்.
சிம்பு, தற்போது தனது 48வது படத்திலும், கமல்ஹாசனுடன் ‘தக் லைஃப்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



