ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும். ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், விநாயக சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடும் மிக மிக முக்கியமானது. விநாயகரின் ஜாதகம்: இணையதளத்தில் விநாயகர் ஜாதகம என உலாவருகிறது.
நவக்கிரகங்களுக்கெல்லாம் அப்பார்பட்டவர் நம் நவசக்தி விநாயகர். அவருக்கே ஜாதகமா என சிலருக்கு தோன்றலாம். “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” எனும் வள்ளுவர்பிரானின் வாக்கிற்கிணங்க விநாயகர் ஜாதகம் நேர்மறை எண்ணத்தை உருவாக்கி நன்மை தரும் என்றால் வணங்குவதில் தவறில்லையே! சரி அவர் ஜாதகம் நமக்கு என்ன சொல்கிறது என பார்ப்போம். விநாயகர் விருச்சிக லக்னத்தில் ஹஸ்த நக்ஷத்திரத்தில் கன்னி ராசியில் பிறந்தவர். லக்னத்தில் கேது மூன்றாமிடமாகிய தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம். ஏழில் சனி, ராகு, ஒன்பதாமிடமாகிய பாக்கிய ஸ்தானத்தில் குரு உச்சம், பத்திலே சூரியன் ஆட்சி, பதினொன்றாம் வீடாகிய கன்னியில் சந்திரன் உச்ச புதன் மற்றும் நீச சுக்கிரனுடன் சேர்ந்து நிற்கிறார்கள்.
விருச்சிக ராசியை லக்னமாக கொண்டவர்கள் அளவிலா ஞானத்தையும் எப்படியாவது அடுத்தவரை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பார்கள். மாம்பழத்துக்காக தாய்தந்தையை சுற்றி தம்பியை வென்ற சாதுர்யம் யாருக்கு வரும்? கேது பகவான் விநாயகரின் ஜாதகத்தில் லக்னத்தில் நின்று தன் ஞானகாரகத்தை சிறப்புற அமைத்துக்கொண்டார் என்பதுதான் சரியாக இருக்கும்.


