விருச்சிகம்
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்
தொடங்கிய வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 2-ம் வீடான தனஸ்தானத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து போய் முடங்கியிருந்த உங்கள் மனத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும்.
புதியவர்கள் அறிமுகமாவார்கள். வி.ஐ.பி நட்பைச் சரியாகப் பயன்படுத்தி பல வேலைகளை முடிப்பீர்கள். மற்றவர்களை நம்பி செயல்பட்டது போதும் என்று, நீங்களே இனி களத்தில் நேரடியாகக் குதிப்பீர்கள். கற்பனையில் மூழ்காமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள். இழுபறியாக இருந்த அரசு காரியம் நல்லவிதமாக முடியும்.
வெளிநாடு, வெளிமாநிலங்கள் சென்று வருவீர்கள். கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும்; உங்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வழியைக் காண்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வசதி, வாய்ப்புகள் நிறைய இருந்தும் வாரிசுகள் இல்லாமல் தவித்தவர்களுக்கு வாரிசு உண்டாகும்.
சனி பகவான் 14.4.2020 முதல் 25.12.2020 வரை பாத சனியாக 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பேச்சில் நிதானம் அவசியம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கறாராக இருங்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். 26.12.2020 முதல் சனி பகவான் 3-ம் வீட்டில் நுழைவதால் புது சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உதவுவார்கள்.
மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமுண்டு. பூர்வீகச் சொத்துக் கான வரியைச் செலுத்தி சரியாகப் பராமரியுங்கள். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம் ராசி
விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை
14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 3-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் கவலைகள் வந்து போகும். இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். நட்பு வட்டத்தில் கவனமாகப் பழகுவது நல்லது.
8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 2-ம் வீட்டில் தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள்.
13.11.2020 முதல் ஆண்டு முடியும் வரை 3-ம் வீட்டுக்கு குரு பகவான் செல்வதால் காரியத் தடைகள் அதிகரிக்கலாம். முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும்.
இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் ஏற்படும். தந்தை வழி உறவினர்களால் உதவிகள் உண்டு.
சித்திரை, வைகாசி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாதங்களில் திடீர்ப் பணவரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வேற்று மொழி பேசுபவர்களால் திருப்பங்கள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கப் பாருங்கள். எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.
1.9.2020 முதல் ஆண்டு முடியும் வரை உங்களின் ராசியில் கேது நிற்பதால் எதிலும் ஒருவித சலிப்பு வந்து நீங்கும். இரும்பு, சுண்ணாம்புச் சத்துள்ள காய்கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
1.9.2020 முதல் 7-ம் வீட்டில் ராகுவும் நுழைவதால் கணவன் மனைவி வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற மன உளைச்சல்கள், காரியத் தடைகள் ஏற்படலாம்.
வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள்.
மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். யாருக்கும் முன்பணம் அதிகம் தர வேண்டாம். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வருட மத்திய பகுதியில் கடையை விரிவுபடுத்துவீர்கள். சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள். தை, மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. புது பங்கு தாரர்களைச் சேர்ப்பீர்கள்.
உத்தியோகத்தில் உங்களை எதிரியைப் போல பார்த்தவர்கள் வேறிடத்துக்கு மாற்றப்படுவார்கள். உங்களின் கை ஓங்கும். வழக்கில் வெற்றியடை வீர்கள். இழந்த பதவியில் மீண்டும் அமர்வீர்கள். வெகுநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு சித்திரை, வைகாசியிலேயே கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்களைத் திருத்துவீர்கள். இயக்கம், சங்கம் சார்பாக பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
கலைத்துறையினரை உதாசினப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும். பாக்கி பணம் கைக்கு வரும்.
பெண்களுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். வைகாசி, ஆவணி, தை மாதங்களில் நினைத்ததைச் சாதிப்பீர்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.
மாணவ, மாணவிகள் கல்வியில் அதிகம் கவனம் செலுத்துவது நல்லது. தேர்வு நேரத்தில் படித்துக்கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். மதிப்பெண் கூடும்.
இந்த சார்வரி ஆண்டு, முடங்கிக்கிடந்த உங்களை முதலிடத்துக்கு அழைத்துச் செல்வதுடன் வசதி வாய்ப்புகளையும் அள்ளித்தருவதாக அமையும்.
பரிகாரம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வீற்றிருக்கும் ஶ்ரீயோக பைரவரை அஷ்டமி திதி நாளில் தீபமேற்றி வணங்குங்கள். செங்கல் சூளை, கல்குவாரியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு உதவுங்கள். ஆரோக்கியம் மேம்படும்.