தனுசு
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்
முன்வைத்த காலை பின் வைக்காமல் முடித்துக்காட்டுவதில் வல்லவர்கள் நீங்கள். உங்களின் ராசியிலேயே இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.
கல்யாணம், புதுமனைப் புகுவிழா, சீமந்தம் என வீடு களைகட்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். வட்டிக்கு வாங்கிய கடனை அசலுடன் கட்டி முடிக்கும் அளவு வருமானம் உயரும். பேச்சில் முதிர்ச்சி தெரியும்.
பூர்வீகச் சொத்தை விற்று புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் இருந்துவந்த கோபங்கள் நீங்கும். அவர்களைக் கலை மற்றும் விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்துவீர்கள். தள்ளிப்போன சகோதரியின் திருமணம் முடியும்.
சனி பகவான் 14.4.2020 முதல் 25.12.2020 வரை ஜன்ம சனியாக இருப்பதால் சலிப்பு, சோர்வு, ஏமாற்றம் வந்து நீங்கும். 26.12.2020 முதல் வருடம் முடியும்வரை பாத சனியாகத் தொடர்வதால் திடீர்ப் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. பொங்கு சனி நடைபெறுபவர்களுக்கு வீடு, மனை வாங்கும் யோகமும், வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.
14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 2-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால், திடீர் யோகம், பணவரவு உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
தனுசு ராசி
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்
8.7.2020 முதல் 12.11.2020 வரை உங்களின் ராசியிலேயே குரு அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.
13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் உங்களின் ராசியை விட்டு விலகி 2-ம் வீடான மகர ராசியில் அமர்வதால் குடும்பத்தில் நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். உடல்நலம் சீராகும். படித்து, பட்டம் வாங்கியும் கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும்.
தினந்தோறும் எதிர்பார்த்துக் காத்திருந்த தொகை கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்லவிதத்தில் அமையும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பரபரப்புடன் காணப்படுவீர்கள். வருங்கால நலனைக் கருத்தில்கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
1.9.2020 முதல் கேது உங்களின் ராசியை விட்டு விலகுவதால் முன்கோபம் நீங்கும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். விலகிச்சென்ற நண்பர்கள், உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். கேது 12-ம் வீட்டில் நுழைவதால் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.
1.9.2020 முதல் 6-ம் வீட்டுக்கு ராகு வருவதால் வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வழக்குகள் சாதகமாகும்.
14.4.2020 முதல் 3.5.2020 வரை மற்றும் 4.6.2020 முதல் 30.7.2020 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுங்கள். அடுத்தவர்களின் விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் நியாயமாகவும் யதார்த்தமாகவும் பேசினாலும் சிலர் ஒரு சார்பாகப் பேசுவதாகக் குறை கூறுவார்கள்.
வியாபாரத்தில் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. நல்ல வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். சிறிய இடத்தில் அவஸ்தைப்பட்டவர்கள் பெரிய இடமாகவும் மக்கள் கூடும் முக்கிய இடமாகவும் புதிய கடையை அமைப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி, உணவு, பெட்ரோ கெமிக்கல் வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். மாசி, பங்குனி மாதங்களில் பிரச்னை தந்தவரை நீக்கிவிட்டு புதிய பங்குதாரர்களைச் சேர்ப்பீர்கள்.
உத்தியோகத்தில் நிலுவைத்தொகை கைக்கு வரும். வைகாசி மாதத்தில் புதிய வேலை அமையும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் சாதகமான சூழ்நிலை உருவாகும். மூத்த அதிகாரி உதவுவார். உங்களின் நெடுநாள் கனவாக இருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கூடும். வேலையைத் தேக்கிவைக்காமல் அவ்வப்போது முடிப்பது நல்லது. மாசி, பங்குனி மாதங்களில் வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும்.
கலைத்துறையினரின் கனவுகள் நனவாகும். அவர்களின் படைப்புகள் பாராட்டப்படும். அரசாங்க கௌரவம் கிடைக்கும்.
பெண்களுக்குக் கண்ணுக்கு அழகான கணவர் அமைவார். உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். பெற்றோர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். ஒரு சிலர் பாதியிலே நின்றுபோன படிப்பைத் தொடருவார்கள்.
மாணவ மாணவியர் அரட்டைப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. சந்தேகங்களைக் கேட்பதில் தயக்கம் வேண்டாம். கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.
இந்தப் புத்தாண்டு கட்டுக்கடங்காத செலவு களையும், கடின வேலைகளையும் தருவதாக இருக்கும். எனினும் நிறைவில் மகிழ்ச்சியையும் வெற்றியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்
நாமக்கல் ஶ்ரீஆஞ்சநேயரை, மூலம் நட்சத்திர நாளில் அல்லது சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.