சிம்மம்
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்
மற்றவர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ள நீங்கள், துவண்டுவருவோருக்குத் தோள் கொடுப்பீர்கள். உங்களின் ராசிக்கு 5-வது ராசியான தனுசு ராசியில் சார்வரி ஆண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகள், வழக்குகள், கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளை வரம் வேண்டியிருந்தவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கணவன் மனைவி அந்நியோன்யம் பெருகும். மகனுக்கு நல்ல இடத்திலிருந்து பெண் அமைவார். மனக்குழப்பங்கள் விலகும். கனிவான பேச்சால் சண்டைச் சச்சரவுகள் குறையும். வீட்டில் சுபகாரியங்கள் சிறப்பாக நடந்தேறும். சொந்த ஊரில் மதிப்பு கூடும். கோயில் விழாக்களில் மரியாதை கிடைக்கும்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 25.12. 2020 வரை சனி 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளிடம் அதிகம் கண்டிப்பு காட்டாதீர்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
26.12.2020 முதல் ஆண்டு முடியும் வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். எதையோ இழந்ததைப் போல இருந்த நிலை மாறி முகம் மலரும். உற்சாகம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்ய வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
சிம்மம் ராசி
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்
14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 6-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் எதிரிகளிடம் குறிப்பறிந்து கவனமாகச் செயல்படுங்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். மகனின் அலட்சியப்போக்கு மாறும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்வீகச் சொத்துகளைச் சீர்செய்வீர்கள். வாகன வசதி பெருகும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள்.
13.11.2020 முதல் ஆண்டு முடியும் வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் அலைச்சலும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.
1.9.2020 முதல் ராகு உங்களின் ராசிக்கு 10-ம் வீட்டுக்குச் செல்வதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பதவி உயரும். சம்பளம் கூடும். நான்காம் வீட்டுக்கு கேது வருவதால் முன்கோபம், எதிலும் ஒரு சலிப்பு வந்து நீங்கும். பல காரியங்களில் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்.
சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நவீன ரக எலெக்ட்ரானிக்ஸ், சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். வெகுகாலமாக சொந்த வீடு வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அந்த ஆசை நிறைவேறும். சிலர் வீட்டில் கூடுதலாக ஓர் அறை கட்டுவார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தியானம், யோகா செய்யுங்கள்.
18.6.2020 முதல் 12.8.2020 வரை மற்றும் 26.10.2020 முதல் 9.12.2020 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் நிற்பதால் வீடு, மனை வாங்கும் முன் தாய்ப் பத்திரத்தைச் சரிபார்த்து வாங்குவது நல்லது. தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும்.
29.1.2021 முதல் 22.2.2021 வரை உள்ள கால கட்டத்தில் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவதும் நல்லது.
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும் என்றாலும் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது போட்டியாளர்கள் வருவார்கள். பழைய சரக்குகளை நல்ல லாபத்துக்கு விற்று புதிதாக கொள்முதல் செய்வீர்கள். வாடிக்கையாளர்களிடமும் பங்குதாரர்களிடமும் கனிவாகப் பேசுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபம் கிடைக்கும். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கம்ப்யூட்டர், ரியல் எஸ்டேட் துறை, ஏற்றுமதி இறக்குமதி துறைகள் நல்ல லாபம் தரும்.
இந்த ஆண்டு பிறக்கும்போது குரு பகவான் 6-ம் வீட்டில் அமர்வதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுக்கு விருப்பமில்லாத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள். கணினித் துறையினர் புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது.
கலைஞர்களுக்குச் சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களை மதிக்கத் தவறாதீர்கள். சின்னச் சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள்.
பெண்களுக்கு ஆண்டின் மையப்பகுதியில் நல்ல வரன் அமையும். தடைபட்ட கல்வியைத் தொடருவீர்கள்.
மாணவர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாத ஆண்டு இது. தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப்பிரிவில் சேருவீர்கள்.
இந்தத் தமிழ்ப் புத்தாண்டு திடீர் வளர்ச்சியை யும் பிள்ளைகளால் நிம்மதியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்
காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள தக்கோலம் எனும் ஊரில் வீற்றிருக்கும் சிவபெருமானையும் ஸ்ரீதட்சணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும்.