ரிஷபம்
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்
எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்ட நீங்கள், உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். உங்களின் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு உண்டு. வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். விலையுயர்ந்த சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்களால் நிம்மதி அடைவீர்கள்.
ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும். அதிகாரம் மிக்க பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். உங்களின் பேச்சுக்கு சமூகத்தில் மரியாதை கூடும். தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும்.
14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி பகவான் அஷ்டம சனியாக இருப்பதால் யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். பண இழப்பு, காரியத் தடைகள் ஏற்படலாம்.
ரிஷபம் ராசி
கிருத்திகை 2,3,4 ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதம்
26.12.2020 முதல் 9-ம் வீட்டுக்கு சனி வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். வீண் அலைச்சல், பல வேலைகளை இழுத்துப்போட்டுப் பார்க்கும் நீங்கள், இனி நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாகும். பாதியில் நின்று போன கட்டட வேலைகளை முழுமையாக முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நீண்டகாலமாகப் போகாமல் இருந்த குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 9 – ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் மன இறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு இப்போது கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும்.
8.7.2020 முதல் 12.11.2020 வரை உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு இருப்பதால் மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.
13.11.2020 முதல் வருடம் முடியும் வரை உங்களின் பாக்கியஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும்.
குடும்பத்தில் தள்ளிப்போன சுப நிகழ்ச்சி களெல்லாம் ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும்.
1.9.2020 முதல் கேது 7-ம் வீட்டில் அமர்வதால் வாழ்க்கைத்துணையின் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். அண்டை மாநில புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வழக்குகளில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.
மாசி, பங்குனி மாதங்களில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு வாரிசு உருவாகும். வர வேண்டிய பணமும் சரியான நேரத்தில் வந்து சேரும்.
17.11.2020 முதல் 12.12.2020 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதனால் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.
வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். தை, மாசி, பங்குனி மாதங்களில் புதிய முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களின் திறமை, உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியின் கழுகுப் பார்வை இனி கனிவுப் பார்வையாக மாறும். தை, மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
கலைஞர்கள் அரசாங்கத்தால் கௌரவிக்கப் படுவார்கள். மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங்களைக் கேட்டறிவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.
பெண்கள் பெற்றோரின் பாசமழையில் நனைவார்கள். ஆடை அணிகலன்கள் சேரும். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தில் வெற்றி யுண்டு. கல்யாணம் சிறப்பாக நடந்து முடியும்.
மாணவ மாணவியர் புத்தகத்தைத் திறந்தாலே தூக்கம் வந்த நிலை மாறும். மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.
இந்த சார்வரி வருடம் வேலைச்சுமையையும், திடீர்ப் பயணங்களையும் தந்தாலும், பண வரவையும் கௌரவத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்
செங்கல்பட்டு அருகிலுள்ள திருமலைவையாவூரில் வீற்றிருக்கும் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளை ஏகாதசி திதி நாளில், புதன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். வாய்பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்.