தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்
துலாம்
ஒற்றுமை உணர்வு அதிகமுள்ள நீங்கள், மற்றவர்களின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டீர்கள். அதிகாரம், ஆணவத்தைவிட அன்புக்குக் கட்டுப்படுவீர்கள். உங்களின் ராசிக்கு 3-வது ராசியான தனுசில் சார்வரி ஆண்டு பிறப்பதால் முடியாததை முடித்துக்காட்டுவீர்கள்.
பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் உடனே நிறைவேறும். தைரியம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. சாதாரண நிலையிலிருந்து வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவீர்கள். பேச்சிலிருந்த முணுமுணுப்பு, சலிப்பு நீங்கும். தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 25.12.2020 வரை சனி 3-ம் வீட்டில் நிற்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தூரத்து சொந்தங்கள் தேடி வருவார்கள். 26.12.2020 முதல் வருடம் முடியும் வரை சனி 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். மகான்களின் வழிபாடு உங்களுக்கு பலனளிக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். உறவுகளால் பலனுண்டு.
14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 4-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால், தாய்வழி உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் இருக்கும்.
8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்கவேண்டி வரும். உங்களின் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சிலரைக் கடிந்துகொள்வீர்கள். தியானம் யோகா செய்வது நல்லது.
துலாம் ராசி
சித்திரை 3, 4 ஆம் பாதம் , சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதம்
13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடுகட்டும் பணி தாமதமாகும். தாய்வழிச் சொத்தைப் போராடிப் பெறவேண்டி வரும்.
ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் உங்களின் மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்த உங்களின் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்துப் பிரச்னைகள் ஆண்டின் மத்திய பகுதியில் தீரும். பிரபலங்களின் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் சில காரியங்கள் நல்லவிதமாக முடியும்.
1.09.2020 முதல் கேது ராசிக்கு 2-ம் வீட்டுக்கு வருவதால் யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். 8-ம் வீட்டுக்கு ராகு வருவதால் திடீர்ப் பயணங்கள் அதிகமாகும். சேமிப்புகள் கரையும். தந்தையாரின் உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கும்.
18.03.2021 முதல் 11.04.2021 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மின் சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள்.
18.2.2021 முதல் 13.4.2021 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் மறைவதால் சகோதரர்களால் நிம்மதியிழப்பீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்தி மீறி எந்த உறுதிமொழியும், யாருக்கும் தர வேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள். பணம் எடுத்துச் செல்லும்போது கவனத்தைச் சிதற விடாதீர்கள்.
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சித்திரை, வைகாசி மாதங்களில் பெரிய நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். மாசி மாதத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாகத் தலையிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும், நிதானத்தைத் தவறவிடாதீர்கள்.
உத்தியோகத்திலிருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். சக ஊழியர்களின் சம்பள உயர்வுக்காகப் போராடுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆவணி, மாசி மாதங்களில் வெளிநாட்டுத் தொடர்புடைய சில நிறுவனங்களிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும்.
கலைஞர்கள் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். மூத்த கலைஞர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். சம்பளம் உயரும்.
பெண்களுக்குத் தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக முடியும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். மாதவிடாய்க் கோளாறு, வயிற்றுவலி நீங்கும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள்.
மாணவர்கள் விளையாட்டைக் குறைத்து படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். உங்களின் திறமையை பலரும் பாராட்டுவார்கள்.
இந்த சார்வரி புத்தாண்டு ஏற்றத்தாழ்வு களையும் செலவுகளையும் கொடுத்தாலும் உங்களின் வளர்ச்சிப் பணிகளைத் தொய்வில்லா மல் தொடர ஏதுவாக அமையும்.
பரிகாரம்
திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீநரசிம்மரை, சனிக்கிழமைகளில் சென்று தீபமேற்றி வணங்குங்கள். சுமை சுமக்கும் தொழிலாளிகளுக்கு உதவுங்கள். வாழ்வில் வளம் பெருகும்.