மீனம்
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்
மென்மையும் விட்டுக்கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை அனுசரித்துப் போகக்கூடியவர்கள். உங்களின் ராசிக்கு 10-வது ராசியில் இந்த சார்வரி ஆண்டு தொடங்குவதால் உங்களின் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். வருங்காலத்துக்காகச் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். அரசு வகை காரியங்கள் எளிதாக முடியும். உயர்பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். சொந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். நவீன வாகனம் மற்றும் மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள்களாக நிலுவையில் இருக்கும் பிரார்த்தனைகளை முடிக்க நேரம் கிடைக்கும்.
14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாட்டினரால் திடீர்த் திருப்பங்கள் ஏற்படும். வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள்.
26.12.2020 முதல் 11-ம் வீட்டுக்குள் சனி நுழைவதால் உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றிபெறுவீர்கள். தாழ்வுமனப் பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.
14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 11-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால், விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நட்புவட்டம் விரிவடையும்.
மீனம் ராசி
பூராட்டாதி 4 ஆம் பாதம், உத்திராட்டாதி , ரேவதி
8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம்.
13.11.2020 முதல் ஆண்டு முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகள், அவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக முடிப்பீர்கள்.
வைகாசி, ஆவணி, மார்கழி, தை மாதங்களில் திடீர்த் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். ஆடி மாதத்தில் பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணை குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்.
1.9.2020 முதல் ராகு 3-ம் வீட்டுக்குள் நுழைவ தால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனவலிமை கிடைக்கும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். அவர்களின் சுப நிகழ்ச்சிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். சிலர் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவார்கள். சிலர் வாடகை வீட்டிலிருந்து, சொந்த வீட்டுக்குக் குடிபுகுவார்கள். வங்கிக்கடன் கிடைக்கும். நீங்கள் முன்பு செய்த உதவிக்கு இப்போது பலன் கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.
28.9.2020 முதல் 23.10.2020 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் அமர்வதால் அந்தக் காலகட்டத்தில் கணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். சிலர் பங்குதாரர்களை விட்டுப் பிரிய வேண்டியது வரும். கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக எதிலும் கையெழுத்திட வேண்டாம். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. புதிய நபர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வரவு அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் வைகாசி, மார்கழி மாதங்கள் சாதகமாக இருக்கும். ஆவணி மாதத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். உயரதிகாரி உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பார். தை, மாசி மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
கலைஞர்களின் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பெரிய நிறுவனத்துக்கென காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.
பெண்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பெற வாய்ப்புகள் வரும். தள்ளித்தள்ளிப் போய்க்கொண்டிருந்த திருமணம் சிறப்பாக முடியும். வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும்.
மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. அலட்சியப்போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் இனி வேண்டாம். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய கல்விப் பிரிவில் போராடி இடம் பிடிப்பீர்கள்.
இந்தத் தமிழ்ப் புத்தாண்டு, உங்களைத் திட்டமிட்டுச் செயல்படவைப்பதுடன், சிக்கனத் தையும் கடைப்பிடிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்
காஞ்சிபுரத்தில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஶ்ரீகாஞ்சி காமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.