கடகம்
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்
வெளிப்படையாக மற்றவர்களைச் சில நேரங்களில் விமர்சிக்கும் நீங்கள், மனிதநேயம் மிக்கவர்கள். உங்களின் ராசிக்கு 6-ம் வீடான தனுசு ராசியில் சார்வரி ஆண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக்காட்டும் வல்லமை பெறுவீர்கள். உங்களையும் அறியாமல் உங்களை அழுத்திக்கொண்டிருந்த அலட்சியப் போக்கு விலகும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உங்களுக்குள்ளே தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். தொலைநோக்கு சிந்தனை அதிகரிக்கும். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும்.
14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி பகவான், தனுசு ராசியில் நிற்பதால் வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். உங்களின் உதவியால் வளர்ச்சியடைந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உயர்பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
26.12.2020 முதல் வருடம் முடியும் வரை 7-ம் வீடான மகர ராசியில் சனி, கண்டகச் சனியாக அமர்வதால் பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
கடகம் ராசி
புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 7-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். தள்ளிப்போன காரி யங்கள் விரைந்து முடியும். நட்பு வட்டம் விரிவடையும்.
8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வது நல்லது. யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்ய வேண்டாம்.
13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவார்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
1.9.2020 முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால் எதிலும் வெற்றியே கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறை மூலம் பணம் வரும். பூர்வீகச் சொத்துகளை மீட்பீர்கள். உறவினர்கள் வியக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும். எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான முடிவெடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். திடீர்ப் பணவரவு உண்டு. இந்த நேரத்தில் கேது உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும்.
ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அரைகுறையாக நின்றுபோன பணிகளை முழு மூச்சுடன் முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். அரசு வகை காரியங்கள் வெற்றியடையும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். சொந்த வீடு வாங்க முடியாமலிருந்தவர்கள் இப்போது வாங்குவார்கள். குடியிருக்கும் வீட்டில் கூடுதலாக ஓர் அறை அல்லது தளம் கட்டுவீர்கள்.
4.5.2020 முதல் 18.6.2020 வரை செவ்வாய் உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் உணவில் கட்டுப்பாடு அவசியம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
5.1.2021 முதல் 29.1.2021 வரை உள்ள கால கட்டத்தில் உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் புதிதாக வந்த போட்டியாளர் களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி இறக்குமதி வகைகளில் இழந்த பணத்தை மீட்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் கோரிக்கைகளை ஏற்பீர்கள்.
உத்தியோகத்தில் உங்களைக் குறை கூறியவர்களே இப்போது மதித்து நடந்து கொள்வார்கள். உங்களின் சேவையை எல்லோரும் பாராட்டுவார்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். இந்த ஆண்டு தொடங்கும் போது குரு 7-ம் வீட்டில் நிற்பதால் நீங்கள் கேட்ட இடமாற்றம் கிடைக்கும். வேலைச்சுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் தகர்த்தெறிவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமானாலும் நிச்சயம் கிடைக்கும்.
கலைஞர்கள் திறமையை வளர்த்துக்கொள்ளும் முயற்சியில் இறங்குவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பெரிய நிறுவனங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆண்டின் பிற்பகுதியில் அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.
பெண்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். வைகாசியில் தவறினால், தை மாதத்தில் திருமணம் நடந்தேறும். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள்.
மாணவ மாணவியர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேருவீர்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்கல்வியில் அதிக மதிப் பெண்ணுடன் வெற்றிபெறுவீர்கள்.
இந்த சார்வரி ஆண்டு, பணபலத்தை உயர்த்து வதாகவும் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் அமையும்.
பரிகாரம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகில் திருபுவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகம்பகரேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீசரபேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று நெய் விளக்கேற்றி வணங்குங்கள். ஏழை மாணவனுக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும்.