தற்போதைய சூழ்நிலையில் சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஏனெனில் கொரோனா வைரஸ் மிகவும் அசுர வேகத்தில் மக்களிடையே பரவி, பலரது உயிரைப் பறித்தும் வருகிறது. ஆனால் நமது உடல் இயற்கையாகவே ஒவ்வொரு நாளும் சளியை உண்டாக்குகிறது என்பது தெரியுமா? ஆனால் அவ்வாறு உடல் உருவாக்கும் சளித் தேக்கம் ஆரோக்கியமற்ற ஒன்றிற்கு அடையாளம் அல்ல. சுவாச மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படும் கபம் என்று அழைக்கப்படும் சளி, உடலின் திசுக்களான மூக்கு, வாய், தொண்டை மற்றும் நுரையீரல் போன்றவற்றில் தொற்றுநோய் ஏற்படாமல் உங்களைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் உடலானது ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் சளியை உருவாக்குகிறது என்பது தெரியுமா?
ஆனால் இந்த அளவுக்கு அதிகமாக சளி உற்பத்தியாகும் போது தான், குறிப்பாக நுரையீரலில் அதிகம் சேரும் போது தான் அது வேறு ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கக்கூடும். இப்போது ஒருவரது மார்பில் சளி அதிகமாக உருவாவதற்கான சில சூழ்நிலைகளைக் காண்போம். இந்த சூழ்நிலைகளில் தான் ஒருவரது உடலில் சளி அதிகமாக உற்பத்தியாகிறது.
அதிகப்படியான அமில உற்பத்தி (Acid Reflux)
உங்களுக்கு அதிகப்படியான அமில உற்பத்தி பிரச்சனை இருந்தால், வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் உணவுக்குழாய் வழியே தொண்டைக்கு வரும். இதனால் நெஞ்செரிச்சலுடன், தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும்.
ஒவ்வாமை (Allergies)
ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், அது கண் அரிப்பு, தும்மல் முதல் மார்பு இறுக்கம் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் மகரந்தம் அல்லது தூசிகள் நிறைந்த காற்றை சுவாசிக்கும் போது, நுரையீரலில் எதிர்வினையை நிகழச் செய்யும்.
ஆஸ்துமா
ஆஸ்துமாவின் பிற அறிகுறிகளான மூச்சுத்திணறல் மற்றும் மார்பு இறுக்கம் போன்றவற்றுடன், ஒருவருக்கு ஆஸ்துமா பிரச்சனையானது சளி நிறைந்த இருமலையும் ஏற்படுத்தும். இது உங்கள் சுவாசப் பாதை வீக்கமடைந்திருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் சிறிய அளவில் வெள்ளை அல்லது தெளிவான சளி உருவாவதால் பிரச்சனை எதுவும் இல்லை.
பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்த்தொற்றுகள்
காய்ச்சல், கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்ற நோய்த்தொற்றுகள் சுவாசப்பாதையில் அதிகப்படியான சளியை உருவாக்கக்கூடும். இதனால் அடிக்கடி இருமல் ஏற்படும். அதோடு மஞ்சள் அல்லது பச்சை நிற சளியும் வெளியேறக்கூடும். தற்போதைய கோவிட்-19 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் நெஞ்சில் சளியை உருவாக்காது. ஆனால் இந்த வைரஸால் ஏற்படும் பிரச்சனைகளுள் நிமோனியாவும் அடங்கும். இது நெஞ்சில் சளியை அதிகரித்து, மார்பு நெரிசலை ஏற்படுத்தும்.
நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (COPD)
COPD-யில் பல நுரையீரல் நோய்கள் உள்ளன. இவை மூச்சு விடுவதை சிரமமாக்குகின்றன. இதில் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் எம்பிஸிமா போன்றவையும் அடங்கும். நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுக்குழாயில் வீக்கத்தையும், அதிக சளியையும் ஏற்படுத்தி, நுரையீரலின் வேலையை கடினமாக்கும். பொதுவாக COPD நீண்ட காலமாக சிகரெட் பிடிப்பவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் அதே சமயம் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது ஏற்படலாம்.
சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்
இது ஒரு பரம்பரை நோய். இதன் விளைவாக நுரையீரலில் மட்டுமின்றி, பிற உறுப்புக்களிலும் அடர்த்தியான சளி உருவாகிறது. வயதானவர்களுக்கு இப்பிரச்சனை இருப்பின் நுரையீரல் செயல்பாடு மோசமடைய வழிவகுக்கும். ஆகவே இப்பிரச்சனை உள்ள கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைக்கு இப்பிரச்சனை இருக்கிறதா என்று ஆரம்பத்திலேயே மருத்துவர்கள் பரிசோதனை செய்கிறார்கள். அதில் இப்பிரச்சனை உள்ள 75 சதவீத பேர் 2 வயதிற்குள் கண்டறியப்படுகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 1000 புதிய சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் கண்டறியப்படுகிறது.
சளி அதிகமாக உருவாவதை வீட்டிலேயே தடுப்பது எப்படி?
வீட்டில் சளியைக் கட்டுப்படுத்த அல்லது அடர்த்தியான சளியை தளர்த்த பின்வரும் வழிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றை ஒருவர் முயற்சி செய்து வந்தால், நெஞ்சில் உள்ள அதிகப்படியான சளியை எளிதில் வெளியேற்றுவதோடு, அதிகம் உற்பத்தி செய்வதையும் கட்டுப்படுத்தலாம்.
தண்ணீர் குடிக்கவும்
தினமும் அதிகளவு நீர் மற்றும் பிற திரவங்களைக் குடிக்க வேண்டும். அதே சமயம் உடல் வறட்சிக்கு வழிவகுக்கும் பானங்களான காபி, டீ, ஆல்கஹால் போன்றவற்றை அதிகம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
ஈரப்பதமாக்குதல்
எப்போது உங்கள் சுவாசப்பாதையை ஈரப்பதத்துடன் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு அவ்வப்போது சூடான காற்றினை சுவாசிப்பது அதாவது ஆவி பிடிப்பது, சுடுநீர் குளியவை மேற்கொள்வது போன்ற விஷயங்களை மேற்கொள்ளுங்கள். இதனால் சுவாசப் பாதையில் அதிகப்படியான சளி தேங்குவதைத் தவிர்க்கலாம்.
சிகரெட்டை விடவும்
சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட் அல்லது மாரிஜூயானா போன்றவற்றைப் புகைப்பதைக் கைவிடுங்கள். இந்த புகை எரிச்சலூட்டுவதோடு, உடலில் அதிகப்படியான சளியை உண்டாக்கும். தேன் சாப்பிடவும் தேன் சளியில் இருந்து முழுமையாக விடுபட செய்யாவிட்டாலும், உங்களுக்கு ஏற்படும் கடுமையான இருமலை தற்காலிகமாக தடுக்கும். ஆகவே தினமும் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு தேன் கொடுக்காதீர்கள்.