கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 6.56 மணியளவில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி , தெலங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி , திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு வசந்தகுமார் எம்.பி, உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. தி.நகர் நடேசன் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, காமராஜர் அரங்கில் வைக்கப்பட்ட வசந்தகுமார் உடலுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, வசந்தகுமார் எம்.பி, உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் கொண்டு செல்லப்படுகிறது. சாலைமார்க்கமாகவே அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. நாளை காலை அகத்தீஸ்வரத்தில் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன.