மானாமதுரை: மானாமதுரை அருகே பிரசவத்திற்காக 30 கி.மீ தூரம் கர்ப்பிணிகள் அலைய வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சின்னக்கண்ணனூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னக்கண்ணனூர், மானங்காத்தான், சோமாத்தூர், புளிக்குளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு துணை சுகாதார மையம் உள்ளது. இந்த மையத்திற்கு சின்னக்கண்ணனூர் தவிர அருகில் உள்ள சீனிக்காரேந்தல், கிளவிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும் வருகின்றனர்.

இங்குள்ள துணை சுகாதார மையத்திற்கு வரும் நோயாளிகளை கவனிப்பதற்கு டாக்டர்கள் வருவதில்லை. மாறாக செவிலியர்களே மருத்துவம் பார்த்து நேரடியாக மாத்திரை மருந்துகள் வழங்குகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகளை பரிசோதிக்காமல் மானாமதுரையில் இருந்து 11 கிலோமீட்டர் தூரமுள்ள கொம்புக்காரனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லுமாறு கிராம சுகாதார செவிலியர்கள் கூறுவதால் கர்ப்பிணிகள் சின்னக்கண்ணனூரில் இருந்து மானாமதுரை வந்து அங்கிருந்து மற்றொரு பஸ் அல்லது ஆட்டோ மூலம் கொம்புக்காரனேந்தல் செல்கின்றனர். இதனால் பணவிரயம், பயணநேரம் அதிகமாவதுடன் கர்ப்பிணிகளுக்கு உடல் ரீதியாக பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதே போல வன்னிக்குடி, கரிசல்குளம், கீழப்பசலை, மேலப்பசலை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 35 கிராம மக்களும் கொம்புக்கார னேந்தல் செல்ல வேண்டியுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் வெங்கட்ராமன் கூறுகையில், வன்னிக்குடி கரிசல்குளம், சின்னக்கண்ணனூர், சோமாத்தூர், புளிக்குளம், மானங்காத்தான், கீழப்பசலை, மேலப்பசலை உள்ளிட்ட 35 கிராமங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற கொம்புக்காரனேந்தல் அல்லது மானாமதுரைக்கு செல்ல வேண்டியுள்ளது. மானாமதுரை வந்து அங்கிருந்து மற்றொரு பஸ் அல்லது ஆட்டோ மூலம் 30 கிலோ மீட்டர் தூரமுள்ள கொம்புக்காரனேந்தல் செல்கின்றனர். இதனால் கர்ப்பிணிகளுக்கு உடல் ரீதியாக பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே சின்னக்கண்ணனூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றிட வேண்டும். அங்கு தினமும் டாக்டர்கள் வந்து சிகிச்சை அளிக்க வேண்டும்’’என்றார்.