நாம் இரவில் சாப்பிடும் உணவுகள், நமது தூக்கத்தை சில சமயங்களில் கெடுத்து விடும். சமயங்கலில் நள்ளிரவில் வயிறு கோளாறு ஏற்படவும், வயிறு சம்பந்தமான பாதிப்புகளை அதிகப்படுத்தவும் இரவு உணவுகள் வழி வகை செய்து விடும். இதனால் ஒரு நாள் தொடரும் பாதிப்பு பல நாட்களுக்கு தொடரும் நிலையும் ஏற்படலாம்.
நமது உடல், மிகவும் சோர்வாக உணரும் நேரம், இரவு நேரம்தான். இந்த சமயத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். பலர், தினசரி டின்னருக்கு பின்னர் சில பழங்களை சாப்பிடுவதை கட்டாயமாக வைத்திருப்பர். அப்படி பலர் தெரியாமல் சாப்பிடும் பழத்தால் வயிற்றுக்குள் ஆசிட் ரீஃப்ளக்ஸ் லெவல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அப்படி, நமக்கே தெரியாமல் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழங்கள் என்னென்ன தெரியுமா?
வாழைப்பழம்:
காலையில் எழுந்து வர்க்-அவுட் செய்வதற்கு முன்னர் உட்கொள்ள வேண்டிய பழமாகவும், உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிடப்படும் உணவாகவும் பார்க்கப்படுகிறது, வாழைப்பழம். இதில், கார்போஹைட்ரேட் சத்துகளும் உடலுக்கு ஆற்றல் கொடுக்கும் சத்துகளும் நிறைந்துள்ளன. ஆனால் இரவில் இந்த பழங்களை உட்கொள்வதால் உடலின் மெட்டபாலிச சக்தி பாதிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதனால் உடல் சூடு அதிகரித்து இரவு தூக்கத்திற்கு வேட்டு வைத்துவிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தர்பூசணி:
வெயில் காலத்தில் தாகத்தையும் உடல் சூட்டையும் தணிக்க அனைவரும் எடுத்துக்கொள்ளும் பழ வகைகளுள் ஒன்று தர்பூசணி. இதில், 92 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதை, இரவில் உங்கள் உணவாக எடுத்துக்கொள்வதால் உங்களது வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ஏற்படலாம். ஆனால் உண்மையில் இதனால் உங்களது சிறுநீர்ப்பைதான் (Bladder) நிறைந்திருக்கும். இதனால் இரவில் தூக்கத்தில் இருந்து அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க நேரிடும். இதில் இருக்கும் இயற்கை சர்க்கரையும் உங்கள் ரத்தத்தில் சுகரின் அளவை அதிகரித்து விடும்.
சிட்ரஸ் பழங்கள்:
நம் அனைவருக்குமே உணவுக்கு பின்னர் ஏதேனும் இனிப்பாக சாப்பிட வேண்டும் போல இருக்கும். ஹெல்தியான வாழ்க்கை முறையில் இருப்பவர்கள் அது போன்று சாப்பிட தோன்றும் போது இனிப்பான சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவர். இரவிலும் இந்த பழக்கம் தொடரும். இது, உங்கள் இனிப்பின் தாகத்தை வேண்டுமானால் குறைக்கலாம். ஆனால், இதனால் உங்களது உடலில் அசிடிட்டி ஏற்பட்டு, நெஞ்செரிச்சல் உருவாகலாம்.
கொய்யா:
கொய்யா பழத்தில் ஃபைபர் சத்துக்கள் நிறையவே நிறைந்திருக்கின்றன. ஆனால் இந்த பழத்தை இரவில் சாப்பிடுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். இரவில் நம் உடலில் மெட்டபாலிச சத்துகள் குறைவாகவே இருக்கும். இதனால் இரவில் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆவதற்கு சில மணி நேரம் அதிகமாகவே தேவைப்படும். இந்த நிலையில், இரவில் கொய்யா சாப்பிட்டால், அது வழக்கத்தை விட மாறாக மிகவும் பொறுமையாக செரிமானம் ஆகும். இதனால், வயிறு வலி உள்பட பல அசௌகரியங்கள் ஏற்படலாம். தூக்கமும் கெட்டுப்போகும்.