IPL 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிராக இன்று நடந்த போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2-இல் வெற்றி பெற்று, பாயின்ட்ஸ் டேபிளில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களத்தில் இறங்கினர்.

அதிரடியாக ரன்களை குவித்த ரோஹித் சர்மா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 32 ரன்னில் வெளியேற அடுத்து வந்த கேமரூன் க்ரீன் 12 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்ய குமார் யாதவால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
திலக் வர்மா 22ரன்னும், டிம் டேவிட் 31 ரன்னும் எடுக்க ஹிருத்திக் ஷோகீன் 18 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 157 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் டெவோன் கான்வே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்ன இணைந்த ருதுராஜ் மற்றும் அஜிங்யா ரஹானே இணை அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.
டெஸ்ட் பேட்ஸ்மேன் என பரவலாக அறியப்ட்ட ரஹானே, 27 பந்துகளில் 3 சிக்சர் 7 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷிவம் துபே 28 ரன்களும், அம்பதி ராயுடு 20 ரன்களும் சேர்க்க, கடைசி வரை களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்கள் எடுத்தார். 18.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சென்னை அணி 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்