கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 40 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பணிப்பாளர் டொக்டர் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பக்டீரியா தொற்றுக்குள்ளான சில குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 நாட்களுக்கு இந்த மருந்துகளை 3 டோஸ் வீதம் வழங்க வேண்டியுள்ளதாகவும், 225,000 ரூபா செலவாகும் என்பதால், சப்ளையர்கள் அத்தகைய விலையுயர்ந்த மருந்துகளை வழங்க முன்வருவதில்லை எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கையிருப்பிலுள்ள மருந்துகளை பயன்படுத்தி வைத்தியசாலையின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக அதிகளவான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாட்டு தூதுவர்களின் உதவியினால் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
எனவே நாட்டில் தற்போது சிறுவர்களுக்கான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதுடன்,சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 60 வீதத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் ,இவ்வருடத்தில் இதுவரை 53,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
~Tamilvin