
ஆணழகன் போட்டிகள், அழகிப் போட்டிகள் உலகெங்கும் பல்வேறு பட்டங்களின் பெயரில் நடைபெற்று வருகிறது. இதில் பல லட்சக்கணக்கில் பரிசுகள் வழங்கப்படுவதன் மாடல் உலகில் பெரும் கவனமும் பெறுவார்கள் எனலாம். உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வாகி பாலிவுட்டிலும் சரி, உலகம் முழுவதும் சரி தற்போது வரை ஒரு பெரிய நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
ஆனால், பெரும்பாலும் இதுபோன்ற போட்டிகளில் இளைஞர்களைதான் முன்னிலைப்படுத்தும். அதிலும் அழகிப் போட்டிகள் என்றாலே இளம்பெண்கள்தான் இடம்பெறுவார்கள் என கண்ணை மூடிக்கொண்டு பலரும் சொல்லிவிடுவார்கள். அழகிப் போட்டிகளில் 30 வயதை தாண்டியவர்களுக்கு இடமே இல்லை என்பதுதான் பொதுப்புத்தியில் பதிவாகி உள்ளது. இதை மறுக்கவும் முடியாது.
அனைவருக்குமானது அழகிப் போட்டி
ஆனால், அர்ஜென்டினாவில் 60 வயது பெண் ஒருவர் அழகிப்போட்டியை வென்று உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். 60 வயதில் இயல்பாக செயல்படுவதே இந்த காலகட்டத்தில் வியப்பாக பார்க்கப்படும் சூழலில், உடலையும், மனதையும் ஒருங்கே ஒருநிலைப்படுத்தி அழகிப்போட்டியில் பட்டத்தை வெல்வது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்திற்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிஸா ரோட்ரிக்ஸ் என்பவர்தான் அனைத்து தடைகளையும் உடைத்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார் எனலாம். கடந்த புதன்கிழமை (ஏப். 24) இவரின் வெற்றி அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, இந்த வெற்றி அவருக்கான கொண்டாட்டத்தை மட்டுமின்றி, அழகிப் போட்டிகள் அனைவருக்குமானதாக மாற வேண்டும் என்பதை உலகிற்கே அறிவித்துள்ளது எனவும் கூறலாம்.
முதல் பெண்மணி
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தலைநகரான லா பிளாட்டைவை சேர்ந்த அலெஜாண்ட்ரா தற்போதுதான் பிரபஞ்ச அழகி. அவர் பகுதிநேர வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரின் வெற்றி என்பது பொதுவெளியில் வயது, அழகு குறித்து நிலவும் அத்தனை கோட்பாடுகளையும் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது எனலாம்.
View this post on Instagram
60 வயதில் அழகிப்போட்டியை வெல்லும் முதல் பெண்மணி என்ற பெருமையை அலெஜாண்ட்ரா பெற்றுள்ளார். அலெஜாண்ட்ராவின் நளினமும், குழந்தைத்தனமான புன்னகையும், நேர்த்தியும் போட்டியின் ஜட்ஜ்கள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்தது எனலாம். மேலும், வரும் மே மாதம் அர்ஜென்டினாவில் தேசியளவில் நடைபெறும் பிரபஞ்ச அழகிப் போட்டியில், பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தை அலெஜாண்ட்ரா பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.
அடுத்து உலகளவில்…
அந்த தொடருக்கு அவர் தயாராகி வருவது குறித்த வீடியோ ஒன்று அவரின் சமூக வலைதளங்களில் பதிவாகி உள்ளது. தேசியளவில் அலெஜாண்ட்ரா வெற்றி பெறும்பட்சத்தில் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி மெக்ஸிகோவில் நடைபெறும் உலகளவிலான பிரபஞ்ச அழகி போட்டியில் அர்ஜென்டினா கொடியை அவர் கையில் ஏந்துவார் என கூறப்படுகிறது.
அழகிப் போட்டியில் பட்டம் வென்றது குறித்து அலெஜாண்ட் கூறுகையில்,”அழகுப் போட்டிகளில் வயது முக்கியத்துவம் பெறாத இந்த புதிய முன்னுதாரணத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி, ஏனென்றால் பெண்கள் உடல் சார்ந்த அழகு மட்டுமல்ல, மதிப்புகளின் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதை நாங்கள் உரக்கக் கூறுகிறோம்” என்றார். பிரபஞ்ச அழகி 2024 தொடரில் டொமினியன் குடியரசு சார்பில் பங்கேற்கும் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவரும் பெரும் கவனத்தை ஈர்க்கிறார்.