சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளம் கிடைக்காவிட்டால் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் அடிப்படை சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அவர்கள் முறையாக சம்பளம் பெறுவதில்லை என தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
எனவே சம்பளம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக ஆராயப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானம்
இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விவகாரம் இழுபறியில் உள்ள நிலையில், சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்க (03.04.2023) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் உரிய முறையில் சம்பளம் கிடைக்கப்பெறாதவர்கள் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்