FIFA World Cup 2022 பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. காலிறுதிப் போட்டிகள் இன்றுடன் நிறைவுபெற்றது. காலிறுதியில், பிரேசில் – குரேஷியா, நெதர்லாந்து – அர்ஜென்டீனா, போர்ச்சுகல் – மொராக்கோ, இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகள் மோதின.
இதில், குரேஷியா, அர்ஜென்டீனா, மொராக்கோ, பிரான்ஸ் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேற, மற்ற அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இதில், பிரேசில், போர்ச்சுகல் அணிகள் தோல்வியுற்று வெளியேறியது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரேஷியாவிடம் பிரேசில் அணி நேற்று முன்தினம் போராடி தோல்வியடைந்தது.
வலிமையான அணியாகவும், உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாகவும் கணிக்கப்பட்ட பிரசில் காலிறுதியோடு வெளியேறியது உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை கவலைக்குள்ளாகியது.

இதையடுத்து, மற்றொரு அதிர்ச்சியாக நேற்றைய போட்டியில், ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, 0-1 என்ற கணக்கில் மொராக்கோவிடம் வீழந்தது. ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பையாக இத்தொடர், பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதிக்கு கூட தகுதிபெறமால் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மற்றொரு புறம், போர்ச்சுகலை வீழ்த்தி, 96 வருட பிபா கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில், அரையிறுதிக்குள் நுழைந்த முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது.
தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறிய சோகத்தில் ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதது, அனைவரின் மனதையும் உருகச்செய்தது. கால்பந்து கால்பதிக்காத இடங்களில் கூட ரொனால்டோவுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், நேற்றைய தோல்வி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மைதானத்திலும், மைதானத்தை விட்டு செல்லும் வழியிலும் அவர் கண்ணீர்விட்டு அழும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தை நிரப்பிவருகின்றன.

இதையடுத்து, அவர் தேசிய அணிக்காக விளையாடுவாரா என்பது அவரின் கையில்தான் உள்ளது. ஆனால், சமீபத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறிய அவர், புதிய கிளப் அணியில் சேர இருக்கிறார் என்றும், சவுதி அரேபிய கிளப் அணி ஒன்றில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன. இன்று நள்ளிரவு நடைபெற்ற இங்கிலாந்து – பிரான்சு போட்டியில், பிரான்சு 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது நினைவுக்கூரத்தக்கது.
அரையிறுதியில், குரேஷியா – அர்ஜென்டீனா, மொராக்கோ – பிரான்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி வரும் 14ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் அரையிறுதியில், குரேஷியா, அர்ஜென்டீனா அணிகளும், 15ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டாம் அரையிறுதியில் மொராக்கோ – பிரான்ஸ் அணிகளும் விளையாடுகின்றன. அதன்பிறகு டிச. 17ஆம் தேதி மூன்றாம் இடத்திற்கான போட்டியும், டிச. 18ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்