கத்தாரில் களைகட்டி வரும் FIFA உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில், அல்-ரயான் நகரில் உள்ள எஜுகேஷன் சிட்டி (Education City) மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதியில் பிரேசில் – குரோஷிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் சமபலத்துடன் ஆடியதால், 90 நிமிடங்கள் பிரதான நேர முடிவில் கோல் ஏதும் இன்றி சமநிலை எட்டப்பட்டது.
இதையடுத்து, 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில், 106-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர், வியத்தகு வகையில் கோல் அடித்து மிரட்டினார். அதுவரை அமைதியாக இருந்த மைதானம், ரசிகர்களின் உற்சாக குரலால் அதிர்ந்தது.
இதையடுத்து, வெற்றிபெற்றதாகவே எண்ணி பிரேசில் வீரர்கள் மெத்தனமாக ஆடினர். இதை சாதகமாக பயன்படுத்திய குரோஷிய அணி, 3 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் பதில் கோல் அடித்து அசத்தியது.

கூடுதல் நேரமும் 1-1 என சமனில் முடிந்ததால், வெற்றியை தீர்மானிக்க ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக, இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இதில், முதல் வாய்ப்பில் குரோஷியா கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆனால், பிரேசில் சார்பில் ரோட்ரிகோ அடித்த பந்தை, குரோஷிய கோல்கீப்பர் லிவோகோவிச் (Livokovic) அற்புதமாக தடுத்து, தனது அணியை காப்பாற்றினார்.
மேலும், தொடர்ந்து 4 வாய்ப்புகளையும் குரோஷிய வீரர்கள் கோலாக மாற்றி வியக்க வைத்தனர்.அதேவேளையில், 4 வாய்ப்புகளில் இரண்டை பிரேசில் வீரர்கள் வீணடித்தனர். இதனால், ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷிய அணி அபார வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

2018 உலகக் கோப்பையில் இரண்டாவது இடம் பிடித்த குரோஷிய அணி, அந்த தொடரில் நாக்-அவுட் மற்றும் காலிறுதியில் எதிரணிகளை ஷூட்-அவுட் முறையிலேயே வீழ்த்தியது.
நடப்புத் தொடரில் நாக்-அவுட்டில் ஜப்பானையும், காலிறுதியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியையும் ஷூட்-அவுட் முறையில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்