
கோலிவுட் திரையுலகின் எதிர்கால முக்கிய ஹீரோக்களுள் முக்கியமான ஒருவராக உள்ளார், நடிகர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நடிகர்களுள் ஒருவர்.
வெற்றிமாறனின் இயக்கத்தில் கவின்?
தமிழ் திரையுலகின் வெற்றி இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், வெற்றிமாறன். இவர், கவினை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விடுதலை 2 படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கும் இவர், விஜய்யின் 69வது படத்தின் டைரக்டராகவும் இருப்பார் என பேசப்படுகிறது. வெற்றி, தற்போது தன் கைவசம் வடசென்னை 2, வாடிவாசல் ஆகிய படங்களையும் வைத்துள்ளார்.
ஜோடியாக நயன்தாராவா!
வெற்றிமாறன்-கவின் கூட்டணியில் உருவாகும் படத்தில் நயன்தாராவை முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நயன்தாராவை விட கவின் வயதில் இளையவராக இருந்தாலும் இவர்களின் ஜோடி படத்தில் வர்க்-அவுட் ஆகும் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இருப்பினும், ஜவான் பான் இந்தியா அளவில் பிசியாகிவிட்ட நயன்தாரா, இனி வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பாரா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.வெற்றிமாறன் படத்தில் கவின் நடிக்க உள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் வெற்றி படங்களில் நடிக்கும் கவின்!
நடிகர் கவின், அன்றைய இளசுகள் இடையே பிரபலமாக இருந்த கனா காணும் காலங்கள் தொடர் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடர ஆரம்பித்தார். அதன் பிறகு சில படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்து வந்த இவர், சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாவது சீசனில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதையடுத்து, இனி சின்னத்திரையில் நடிக்கப்போவதில்லை என்று முடிவு செய்த இவர், அதன் பிறகு சினிமாவில் சில துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.
பீட்ஸா, இன்று நேற்று நாளை, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்த இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, இவருக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.
இதையடுத்து நடிகர் கவின் சில படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இவர் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த நட்புன்னா என்னான்னு தெரியுமா படம் பெரிதாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. இதையடுத்து, அவர் கொரோனா சமயத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியான லிஃப்ட் படத்தில் நடித்தார். இப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, அவரது அடுத்த படமான டாடாவும் ஹிட் ஆனது. கடந்த ஆண்டு வெளியான இப்படம், பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
கவினின் அடுத்தடுத்த படங்கள்:
கவின், தற்போது ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்த அவர், கிஸ் என்ற படத்திலும் நடிக்கிறார். இரு படங்களுமே இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.