ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து இன்றைய போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன. நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – இலங்கை அணிகள் முதன்முறையாக மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னாயிற்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றிருந்தார். முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் இன்றைய போட்டி முக்கியமனதாக இருந்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 6 ரன்னிலும் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். சூர்யகுமார் யாதவ் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தார். சூர்யா குமார் யாதவ் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் யாரும் சோபிக்காத காரணத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் குஷல் மெண்டிஸ் இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். பாத்தும் நிஸ்ஸங்க 52 ரன்களும் குஷால் மெண்டிஸ் 57 ரன்களும் சேர்த்து அவுட்டாகினர். இதையடுத்து போட்டி பரபரப்பாக சென்றது. இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி இலக்கை எட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி ஆப்கானிஸ்தான், இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. நாளை நடைபெறும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தொடரை விட்டு வெளியேறும் என்பது குறிப்பிடதக்கது.