
இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு அழகு சார்ந்த பிரச்சினைகள் ஏராளமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக முகத்தில் தேவை இல்லாத முடி வளர்ச்சி பிரச்சனை பெரும்பான்மையான பெண்களுக்கு முதல் பிரச்சனையாக காணப்படுகிறது. உதட்டுக்கு மேலே பூனை முடி பிரச்சனை, தாடையில் முடி வளர்வது, கன்னத்தில் அதிகமாக முடி வளர்வது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இயற்கையான முறையில் சில அழகு குறிப்பு இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பின் சொல்லக் கூடிய இந்த இயற்கையான அழகு குறிப்புகளை பின்பற்றி வர, தேவையற்ற முடிகள் முகத்தில் இருந்தும், கை கால்களில் இருந்தும் தானாக உதிர தொடங்கும். தேவையற்ற முடி பிரச்சனையால் அவதிப்படும் பெண்கள் இந்த குறிப்புகளை படித்து பலன் பெறலாம்.
அழகு குறிப்பு 1:
ஒரு சின்ன கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் குப்பைமேனி பொடி 1 ஸ்பூன், அம்மான் பச்சரிசி பொடி 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் 1 ஸ்பூன், போட்டு இதில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி பேஸ்ட் போல கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போடவும். 15 நிமிடத்தில் இந்த பேக் நன்றாக காய்ந்த பிறகு, மீண்டும் அதன் மேலே மீண்டும் இதே பேக்கை அப்ளை செய்யுங்கள்.
பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும். கொஞ்சம் ஸ்க்ரப் செய்த படி முகத்தை கழுவுங்கள். பிறகு 1/2 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் ஆவி பிடிக்கவும். இந்த பொடிகள் எல்லாம் நாட்டு மருந்து கடைகளிலேயே சுலபமாக கிடைக்கிறது.
அழகு குறிப்பு 2:
ஒரு சின்ன கிண்ணத்தில் வசம்பு பொடி 1 டேபிள் ஸ்பூன், தேன் 2 ஸ்பூன், கொஞ்சமாக எலுமிச்சம் பழச்சாறையும் ஊற்றி கலந்து இதையும் பேஸ் பேக்காக அப்ளை செய்யவும், 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பிறகு 1 மணி நேரம் கழித்து முகத்தை நன்றாக சுடு தண்ணீரில் ஆவி பிடிக்கவும்.
இந்த இரண்டு அழகு குறிப்புகளையுமே தொடர்ந்து பின்பற்றலாம். வாரத்தில் 3 நாட்கள் மாற்றி மாற்றி இந்த பேக்கை முகத்தில் போட்டு வர, உங்களுடைய தேவையற்ற முடிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தானாக உதிர்வதை உணர முடியும். ஒரே நாளில் மொத்த ரிசல்ட்டையும் பார்க்க முடியாது. இது இயற்கையான அழகு குறிப்பு என்பதால், ரிசல்ட் கிடைக்க கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் வளராமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவையற்ற முடி வளர்ச்சியை தடுப்பதில் முதலிடம் வகிப்பது மஞ்சள். தினமும் கஸ்தூரி மஞ்சளை ஃபேஸ் பேக்காக போடலாம். மஞ்சள் அலர்ஜி இல்லை என்பவர்கள் தினமும் இந்த கஸ்தூரி மஞ்சளை ஃபேஸ் பேக்காக போட்டு வாருங்கள். குளிக்கும் போது மஞ்சள் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை பெண்கள் வைத்துக் கொண்டாலே பிரச்சனையில் பாதி தீர்ந்து விடும்.