தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்றது. இப்போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின்போது 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்அப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது.
12-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை மார்கிராம் எதிர்கொண்டார். எதிர்முனையில் டி வில்லியர்ஸ் நின்றிருந்தார். மார்கிராம் பந்தை லெக் சைடு அடித்தார். பந்து நேராக வார்னர் கைக்கு சென்றது.
இந்த நேரத்தில் டி வில்லியர்ஸ் ரன் எடுக்க வேகமாக ஓடினார். அப்போது மார்கிராம் ஓடிவர விரும்பவில்லை. இதனால் டி வில்லியர்ஸ் வேகமாக திரும்பினார். அதற்குள் பந்து நாதன் லயன் கைக்கு வந்து விட்டது. ரன்அவுட்டில் இருந்து தப்பிக்க டி வில்லியர்ஸ் பாய்ந்தார். அப்போது தரையில் விழுந்து க்ரீஸை அடைந்தார். அதற்குள் நாதன் லயன் ரன்அவுட் ஆக்கினார்.
அத்துடன் கையில் இருந்த பந்தை டி வில்லியர்ஸை நோக்கி எறிந்தார். அப்போது டி வில்லியர்ஸ வயிற்றுப் பகுதிக்கு அருகில் பந்து விழுந்தது. இதை டி வில்லியர்ஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கிரிக்கெட் ரசிகர்களும் இதை விரும்பவில்லை. அதேவேளையில் வார்னர் அளவுக்கு மீறிய வகையில் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.
நாதன் லயன் நடவடிக்கை குறித்து போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் ஆய்வு செய்தார். அப்போது நாதன் லயன் செய்தது குற்றம் என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் வீரர்கள் நன்னடத்தையில் இது முதல் நிலை என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக நாதன் லயனுக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நாதன் லயன், தான் செய்தது தவறு என ஒப்புகொண்டதாகவும், அதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.