
தெய்வங்களை நாம் வீட்டில் வணங்கினாலும், கோவிலுக்கு சென்று வணங்கினாலும் அவ்வாறு வணங்கும் பொழுது நம்முடன் இருக்கக்கூடிய மிகவும் முக்கியமான பொருள்தான் மலர்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு மலர்கள் மிகவும் உகந்த மலர்களாக திகழ்கின்றன.
அந்த மலர்களை நாம் தெய்வத்திற்கு கொடுத்து வழிபடுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் சிலர் அப்படி தெய்வங்களுக்கு உகந்த மலர்களை வீட்டிலேயே வைத்து பராமரித்து வளர்ப்பார்கள். இந்த வாஸ்து குறித்த பதிவில் எந்த செடிகளை நம் வீட்டில் வைத்து வளர்த்தால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
பவளமல்லி
அற்புதமான மணம் நிறைந்த பூவாக இந்த பூ திகழ்கிறது. இந்த பூவை அனைத்து தெய்வங்களுக்கும் நாம் சூட்டி வணங்கலாம். அதேபோல் இந்தப் பூ இருக்கும் இடத்தில் எதிர்மறை சக்திகள், தீய எண்ணங்கள் எதுவும் அணுகாது என்று கூறப்படுகிறது.அது மட்டுமல்லாமல் இந்த பூவை நாம் எந்த வேண்டுதலோடு எந்த தெய்வத்திற்கு போட்டாலும் அந்த வேண்டுதல் விரைவிலேயே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
பாரிஜாதம்
இந்த மலர் பெருமாளுக்கு உகந்த மலராக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது தேவலோகத்தை சேர்ந்த மலர் என்றும் இதில் பெருமாள் வாசம் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த மலரை பார்ப்பதும் இந்த செடியை வளர்ப்பதும் அதிர்ஷ்டத்தை வரவழைக்கக் கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. நிறைந்த செல்வத்தோடு பெருமாளின் அருளை பெறுவதற்கு பாரிஜாத செடியை வீட்டில் வளர்த்தாலே போதும்.
மனோரஞ்சிதம்
இந்தச் செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் நபர்கள் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக செயலாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செல்வ செழிப்பை இந்த செடி அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த செடியை தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் வளர்த்து வந்தால் தொழிலில் ஏற்பட்டிருக்கும் அனைத்து தடைகளும் நீங்கி தொழில் லாபகரமாக நடைபெறும். மேலும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் வெல்லக்கூடிய அற்புதமான சக்தியை இந்த செடி வழங்குகிறது.
செண்பகப் பூ செடி
இந்த செடி யார் ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர்களிடம் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தச் செடி சுக்கிர பகவானின் அம்சமாக திகழ்வதால் யார் வீட்டில் இந்த செடி வளர்ந்து பூக்கள் மலர்கிறதோ அந்த வீட்டில் சுக்கிர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் செல்வ செழிப்புடன் நிறைந்த செல்வத்துடன் வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த மலர்களை மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளிக்கிழமை தோறும் நாம் சூட்டினால் மகாலட்சுமி தாயார் மனம் மகிழ்ந்து நமக்கு செல்வ செழிப்பை ஏற்படுத்தித் தருவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த செடிகளில் ஏதாவது ஒன்றையாவது நம் வீட்டில் நாம் வளர்த்து பராமரித்து வந்தோம் என்றால் நம்மை தேடி அதிர்ஷ்டம் வரும் என்பது வாஸ்து ரீதியாக கூறப்பட்ட செய்தியாகும்.