கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நல்ல படங்களுள் ஒன்று ‘டாடா’. இந்த படத்தை கணேஷ் கே.பாபு இயக்கியிருந்தார். இப்படத்தில் கவின் ஹீராேவாக நடித்திருந்தார். படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இப்படம் வெளியாகி 1 ஆண்டு நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
டாடா திரைப்படம்:
தமிழ் திரையுலகில், தற்போது நல்ல கதையம்சத்துடன் வரும் குறைவான பட்ஜெட் திரைப்படங்களும் பெரிய ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்ற படம், டாடா. இந்த படத்தை புதுமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கியிருந்தார். கவின் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்திருந்தார். யுவன் சங்கர் ராஜா பாடியிருந்த ‘போகாதே’ பாடல் இளசுகள் மத்தியில் பெரிய ஹிட் அடித்தது.
அனிருத்தை வைத்து கதை எழுதிய இயக்குநர்..
டாடா படத்தின் இயக்குநர், கணேஷ் கே.பாபு ஒரு நேர்காணில் கலந்து காெண்ட போது அப்படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, தான் டாடா படத்தின் கதையை எழுதிய போது இசையமைப்பாளர் அனிருத்தை மனதில் வைத்துதான் எழுதியதாக கூறியிருந்தார். அனிருத்தை இப்படத்தில் நடிக்க வைத்திருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்து இந்த கதையை வடிவமைத்ததாகவும் கூறியிருந்தார்.
அனிருத் நடித்துள்ள படங்கள்..
அனிருத், தான் சினிமாவிற்கு வந்த புதிதில் இருந்து இசையமைக்கும் பணியையும் பாடல் பாடும் பணியை மட்டுமே செய்து வருகிறார். மாரி படத்திலும் எதிர்நீச்சல் படங்களில் மட்டும் தனது பாடல்களில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இது தவிர, பாடல் பணியின் போது எடுக்கப்படும் பிடிஎஸ் வீடியோக்களில் இடம் பெற்றிருப்பார்.
முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர்..
டாடா படத்தில், புதுமுகங்களை வைத்து இயக்க திட்டமிட்டிருந்தாராம், அப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே.பாபு. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் இந்த ஐடியாவிற்கு நோ சொன்னதாகவும், புது முகங்களை வைத்து எடுத்தால் படம் சக்சஸ் ஆகாது என்ற காரணத்தால் தெரிந்த முகங்களை வைத்து படம் இயக்க கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்த போது டாடா படத்தில் தான் ஹீரோவாக நடிக்க இருந்ததாகவும், கவினிற்காக விட்டுக்கொடுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். டாடா படத்தில் இவர் கவினுடன் வேலை பார்ப்பவராக நடித்திருந்தார். இவர, தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவருக்கு பல வருடங்களாக நண்பராக உள்ளார்.