இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் கேஸ் சிலிண்டர் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் கடந்த சில வருடங்களாகவே எல்பிஜி கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதை செய்திகள் மூலம் நாம் பார்த்து வருகிறோம்.

அதேசமயம் கேஸ் சிலிண்டர் வெடிக்காமல் இருப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் மற்றும் விழிப்புனர்வு சார்ந்த செய்திகள் வந்துகொண்டே தான் இருக்கிறது.

ஒவ்வொரு முறை புதிய கேஸ் வாங்கி வைக்கும் போதும், கேஸ் லீக் வாடை வந்தாலுமே சற்று பயந்து போகும் நமக்கு இது ஓர் நற்செய்தி என்று தான் கூற வேண்டும்.

அதாவது, இயற்கை எரிவாயு கலன் என்பது தான் அது. இது கிராமத்தில் இருப்பவர்களுக்கும், கால்நடைகளை அதிகம் வளர்ப்பவர்களுக்கும் எளிதாக இருக்கும்.

காரணம், இந்த இயற்கை எரிவாயு கலனுக்கு கால்நடைகளின் கழிவு அவசியம். அதுபோல இந்த கால்நடைகளின் கழிவு எரிவாயுவாக மாறி பின்பு இயற்கை உரமாகவும் நமக்கு திரும்ப கிடைக்கிறது. அந்த உரத்தினை நமது தோட்டத்திற்கு பயன்ப்படுத்தலாம்.

மாடுகள் வளர்ப்பில் பெரும்பாலும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதில்லை. ஆனால், அதன் கழிவுகளை பல வழிகளிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இயற்கை விவசாயத்துக்கு நாட்டு மாடுகளே ஆதாரமாகவுள்ள நிலையில், அதிலிருந்து சமையல் எரிவாயு எடுத்துவிட்டு பின் இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகிறது.

தினமும் தொட்டியில் கரைத்துவிடப்படும் சாணம், எரிவாயு சேமிப்பு கொள்கலனுக்குள் சேர்கிறது. அதிலிருந்து, உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவும் குழாய் மூலம், இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

அதிலிருந்து வெளியேறும் சாணக்கழிவுகள், தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. அதிலிருந்து பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் உள்ளிட்ட இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சாணத்தை கரைத்து விடுவதும், தொட்டியில் சேகரமாகும் கழிவுகளை சேகரிப்பது மட்டுமே அதிகப்பட்ச வேலையாகும்.