ஆந்திர மாநிலம் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திருப்பதியில் நாளை சாமி தரிசனம் செய்கிறார்.

டெல்லியில் இருந்து சென்னை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று காஞ்சிபுரம் சென்று வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்தார்.

இந்நிலையில், சென்னையில் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார்.

அதன்பின்னர், மாலையில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புறப்பட்டு சென்றார்.

விமான நிலையத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மாநில ஆளுநர் நரசிம்மன் மற்றும் அம்மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அங்கிருந்து காரில் திருமலை செல்லும் ஜனாதிபதி இரவு மலை கோவிலில் தங்குகிறார். நாளை காலை திருப்பதி வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்கிறார். மாலையில் திருமலையில் நடைபெறும் ஆர்ஜித சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.