உலகக்கோப்பை தொடரில் டோனி விதவிதமான பேட்களுடன் களமிறங்குவதற்கான சுவாரசியமான காரணம் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா உள்பட பத்து நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அதில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனி தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியின் நடுவிலும் தனது பேட்டினை அடிக்கடி மாற்றம் செய்து ஆடுகிறார்.

ஒவ்வொரு முறையும் அவர் மாற்றும் பேட்டில் வெவ்வேறு நிறுவனத்தின் முத்திரைகள் பதிக்கப்பட்டதாக உள்ளது. இதற்கான காரணம் குறித்து ரசிகர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவி வந்தன. இந்நிலையில் இது குறித்து டோனியின் மேலாளர் அருன் பாண்டே சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

dhoni-thinatamil
dhoni-thinatamil

டோனியின் மேலாளர் கூறியதாவது:

டோனி மிகவும் பரந்த உள்ளம் கொண்டவர். போட்டிகளின் போது வெவ்வேறு நிறுவனங்களின் ‘லோகோ’ பதித்த பேட்டுகளை கொண்டு விளையாடுவதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு நிலைகளை கடந்து வந்தபோது தனக்கு உறுதுணையாக இருந்த பேட் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே அவர் அடிக்கடி பேட்டினை மாற்றி விளையாடுகிறார். மேலும், பேட் பயன்படுத்தும் விளம்பரத்திற்காக டோனி எந்தவிதமான ஊதியத்தையும் வாங்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டோனி நடைபெற்று கொண்டிருக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பின் தனது ஓய்வு அறிவிப்பை வெளியீடுவார் என பரவலாக செய்திகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.