உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இத்தனை தற்காப்பா? என இந்திய அணி வீரர்களை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

உலக கோப்பை தொடரின் 34-வது லீக் ஆட்டம் நேற்று மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. இதில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் சேர்த்தது.

டோனி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட்டும், காட்ரெல் மற்றும் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. முதலில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்னும், நிகோலஸ் பூரன் 28 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ரஷித் கான், முதல் 4 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக் கொடுத்தார். அடுத்த 6 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பின்னர் ஆலன், முதல் 5 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்தார். ஆனால், கடைசி ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் இத்தனை தற்காப்பா?’ என பதிவிட்டு இந்திய அணியை விமர்சித்துள்ளார்.

சேவாக் கூறிய இரண்டு ஸ்பின்னர்களின் ஓவர்களையும், பின்னால் எதிர்கொண்டது டோனிதான். இதனால் அவர் டோனியை தான் மறைமுகமாக விமர்சிக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட்களில் கூறி வருகின்றனர்.