முதல் பாகத்தில் பிரபு தேவாவின் மனைவி தமன்னாவை ஒரு நடிகையின் பேய் பிடித்து ஆட்டும். அதிலிருந்து அவருக்கு தெரியாமலேயே பிரபு தேவா காப்பாற்றுவார். மனைவி மீது மீண்டும் அந்த பேய் வந்து விடக்கூடாது என்பதற்காக 2ம் பாகத்தில் நான்கு புறமும் கடல் சூழ்ந்த மொரீசியஸ் தீவுக்கு பணிமாறுதல் வாங்கிக் கொண்டு செல்கிறார். ஆனால் அங்கு அவரை இரண்டு பேய்கள் பிடித்துக் கொள்கிறது. காதலிக்கிற பெண்களிடம் காதலை சொல்வதற்கு முன்பே விபத்தில் இறந்து விட்ட அந்த இரண்டு பேய்களும் பிரபுதேவாவின் உடலுக்குள் புகுந்து கொள்கிறது.

இதை கண்டுபிடித்து விடும் தமன்னா, கணவனுக்கு தெரியாமலேயே அந்த பேய்களை எப்படி விரட்டுகிறார் என்பதுதான் கதை. முதல் பாக கதையை அப்படியே திருப்பிப் போட்டு இரண்டாம் பாகத்திலும் பயமுறுத்தி சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால் ஒன்றுக்கு இரண்டு பேய், பேய்களுக்கு தனி காதல் கதை, அவர்களுக்கு ஒரு வில்லன் என்று பல குழப்பங்களை உருவாக்கி, அதை தீர்க்க முடியாமல் தவித்து அவரே களைத்துப் போய்விடுகிறார். பிரபு தேவா மூன்று மனிதர்களின் கேரக்டரை ஒரே உருவத்தில் நடிக்க வேண்டும்.

கண்ணாடியை போட்டு விட்டால் ஒரு கேரக்டர், தெலுங்கில் பேசி விட்டால் ஒரு கேரக்டர், மனைவி மீது அன்பை பொழிந்தால் ஒரு கேரக்டர் என வித்தியாசம் காட்டுகிறார். தமன்னா சொன்ன பிறகுதான் அவர் எந்த கேரக்டரில் நடிக்கிறார் என்பதையே புரிந்து கொள்ள முடிகிறது.
கோவை சரளா கத்தி பேசி, உடம்பை அஸ்டகோனத்தில் வளைத்து நடித்து வெறுப்பேற்றுகிறார். பேய் படங்களுக்கென்று சில மேனரிசங்களை வைத்திருக்கிறார். அதையே இதிலும் ரிபீட் செய்திருக்கிறார். தமன்னா அன்பான மனைவியாக ஓகே. ஆனால் காமெடியெல்லாம் அவருக்கு ஷெட்டாகவில்லை.

அவரை கவர்ச்சியாக காட்ட வேண்டும் என்பதற்காகவே ஒரு பாடலை திணித்து அரைகுறை ஆடையுடன் ஆட வைத்திருக்கிறார்கள். நந்திதா ஸ்வேதா, டிம்பிள் ஹயாதிக்கு பெரிய வாய்ப்பில்லை. பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார்கள். அஜ்மல் வழக்கமான யூத் வில்லன். முதல் பாகத்தில் நடித்திருந்த சோனு சூட்டும், ஆர்ஜே.பாலாஜியும் “உள்ளேன் அய்யா” சொல்லிவிட்டுப் போகிறார்கள். ஒளிப்பதிவாளர் அயனன்கா போஸ் மொரீஷியஸ் தீவுக்கு சுற்றுலா அழைத்து செல்கிறார். அப்படியொரு அழகான கோணங்கள். சாம் சி.எஸ்சின் இசை கதைக்கு தேவையானதை செய்திருக்கிறது. முதல் பாகத்தில் ஆட்டம்போட்ட தேவி இரண்டாம் பாகத்தில் அடங்கிப்போகிறார்.