என்ஜிகே என்று அழைக்கப்படுகிற நந்த கோபாலன் குமரன் ஒரு பொறியியல் பட்டதாரி. படிப்புக்கேற்ற வேலை கை நிறைய சம்பளம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து இயற்கை விவசாயம் செய்கிறார். அவருடன் மேலும் சில இளைஞர்கள் அந்த விவசாயத்தை செய்கிறார்கள். இதனால் கள்ள மார்க்கெட் வியாபாரிகள் முதல் கந்துவட்டிக்காரர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் “தம்பி வேண்டாம் நிறுத்திடு” என்கிறார்கள். நந்தகோபாலன் கேட்காததால் ஊரையே அடித்து துவம்சம் பண்ணுகிறார்கள். ஒரு சாதாரண கவுன்சிலர், எம்.எல்.ஏவின் விரல் அசைவில் எல்லாம் நடக்கிறது.

அப்படி என்றால் நாமே அரசியல்வாதியாகி விட்டால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று கணக்கு போடுகிறார் நந்தகோபாலன். 500 இளைஞர்களுடன் அரசியல் களத்தில் குதிக்கும் அவர் எப்படி முதல்வர் வரைக்கும் வளர்கிறார் என்பது மீதிக் கதை. படிப்பதற்கு நன்றாக இருக்கும் இந்த கதை பார்க்கத் தகுந்த நல்ல படமாகாமல் போனதுதான் சோகம். சத்யராஜின் அமைதிப் படையில் கொஞ்சம், சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்திலிருந்து கொஞ்சம் எடுத்துப்போட்டு கலப்பட அரசியல் செய்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

சூர்யா துடிப்பு மிக்க, வீரமிக்க இளைஞனாக நடிப்பது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இதில் நந்தகோபாலாக சோபிக்கவில்லை. திடீரென்று மனோகரா ஸ்டைலில் வசனம் பேசுகிறார். திடீரென்று அழுகிறார். “கத்துக்றேன் தலைவரே” என்று பம்முமுகிறார். என்னாச்சு சூர்யாவுக்கு என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ‘‘என்பேரு நந்தகோபாலன் குமரன் என்னை என்ஜிகேன்னு கூப்பிடுவாங்க’’ என்று கெத்தாக பேசுகிறார். ஆனால் படத்தில் கடைசி வரை அப்படி யாருமே கூப்பிடவில்லை.

அன்பான காதல் மனைவியாக சாய் பல்லவி. நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கணவன் மீது மிகப்பெரிய அன்பும், நம்பிக்கையும் கொண்ட அவர் கணவன் மீது வீசும் பெர்பியூம் வாசனைக்காக சந்தேகப்படுவது, இன்னொருத்தி கணவன் என்று தெரிந்தும் ரகுல் ப்ரீத்தி சிங் சூர்யா மீது மோகம் ெகாள்வது, இருவருக்கும் இடையில் வரும் ஈகோ சண்டை, பெர்மியூம் வாசனை பற்றி சாய்பல்லவி கிளாஸ் எடுப்பது எல்லாமே செல்வராகவன் பிராண்ட் காட்சிகள். ரகுலுக்கு மார்டன் டிரஸ்சும், டூயட் பாடலும் மட்டும் போனஸ்.

அவ்வளவு பெரிய ஹீரோவுக்கு கன்னடத்து தேவராஜ், இளவரசு, பொன் வண்ணன், தலைவாசல் விஜய் என சாதாரண வில்லன்கள். அதனால் மோதல் எதையும் ரசிக்க முடியவில்லை. இயற்கை விவசாயத்தை வளர்க்கத்தான் அரசியலுக்கே வருகிறார் சூர்யா, அப்புறம் அதை மறந்து விடுகிறார். ‘அரசியலை சுத்தப்படுத்து’ என்று மனைவி அனுப்பி வைக்கிறார். ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு இவரும் தில்லுமுல்லு செய்கிறார். இப்படி படம் முழுக்க முன்னுக்கு பின் முரணான காட்சிகள். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்தை காப்பாற்ற முயற்சிக்கிறது. என்ஜிகேவின் அரசியல். லட்டர் பேர்ட் கட்சி மாதிரி உப்புசப்பில்லாமல் போகிறது.