இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்திய மார்க்கெட்டில் கால் பதிக்க உள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக கார், இந்திய மார்க்கெட்டில் இந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி ரக கார்களுடன் எம்ஜி ஹெக்டர் நேரடியாக மோத உள்ளது.எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக கார், முதலில் 5 சீட்டர் மாடலில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. 5 சீட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்த பின்னர், 7 சீட்டர் மாடலை விற்பனைக்கு கொண்டு வரவும் எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போது சீன மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் பயோஜென் 530 எஸ்யூவி (Baojun 530 SUV) காரின், ரீ-இன்ஜினீயரிங் செய்யப்பட்ட மாடல்தான் எம்ஜி ஹெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால், எம்ஜி ஹெக்டர் மற்றும் பயோஜன் 530 ஆகிய இரண்டு எஸ்யூவி ரக கார்களும், பெரும்பாலான டிசைன் அம்சங்களில் ஒத்துப்போகின்றன. அதே நேரத்தில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக காரின் கேபின் டிசைன், வுல்லிங் அல்மாஸ் எஸ்யூவி (Wuling Almaz SUV) காரை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. வுல்லிங் அல்மாஸ் எஸ்யூவி ரக கார், சமீபத்தில்தான் இந்தோனேஷிய மார்க்கெட்டில் வெளியிடப்பட்டது.

1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்பட உள்ளன. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. அதே நேரத்தில், டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. தற்போதைய நிலையில் எம்ஜி நிறுவனம் இந்தியாவின் முன்னணி நகரங்களில் டீலர்ஷிப்களை நிர்மாணிக்கும் பணிகளை செய்து வருகிறது.

வரும் ஜூன் மாதத்திற்குள் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் 50 டீலர்ஷிப்களை திறந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, 120 டச் பாயிண்ட்களை திறக்கவும் எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார், குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. ஹெக்டர் 5 சீட்டரை தொடர்ந்து, இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஹெக்டர் 7 சீட்டர் எஸ்யூவி உள்ளிட்ட மாடல்களையும் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.