ஐதராபாத் அணிக்கெதிராக தனது விக்கெட்டை வீழ்த்திய கலீல் அகமதுவை விராட் கோலி கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 54-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது.

இந்த போட்டியின் போது ஐதராபாத் அணியை சேர்ந்த கலீல் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் விராட் கோலி விக்கெட்டும் அடங்கும். விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய பின் கலீல் அகமது ரசிகர்களை நோக்கி கை சைகை காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த போட்டியில் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஆட்டநாயகனாக ஹெட்மயர் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி முடிந்த பிறகு வீரர்கள் வெற்றி குறித்து பேசி கொண்டிருந்த போது தனது விக்கெட்டை வீழ்த்திய கலீல் அகமதுவை அவர் கை சைகை காட்டியது போல விராட் கோலியும் சைகை காட்டி கிண்டல் அடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.