2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

சென்னையில் மார்ச் 23-ம் தேதி மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது.

12-வது ஐபிஎல் போட்டி வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ்(டேர்டெவில்ஸ் பெயர்மாற்றம்).மும்பை, இந்தியன்ஸ், கிங்ஸ்லெவன்பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. மார்ச் 23-ம்தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடக்கின்றன. மொத்தம் 17 போட்டிகள், 8 நகரங்களில் நடைபெறுகிறது.

அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகள் மட்டும் 5 போட்டிகளில் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் 2 போட்டிகளை சொந்தமாநிலத்திலும், 2 போட்டிகளை வெளிமாநிலத்திலும் விளையாடுகின்றன. டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணி 3 போட்டிகள் வெளிமாநிலத்தில் விளையாடுகின்றன.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், ” மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதையடுத்து, முதல் இரு வாரங்களுக்கான போட்டி அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின், மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை, மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்துபேசி, தேர்தல் தேதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அறிவிக்கப்படும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.