காப்புரிமை மீறல் விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் சுமார் 6700 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது மிகவும் இயல்பான விவகாரம் தான். ஆனாலும் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடையே ஏற்படும் காப்புரிமை பிரச்சனைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காப்புரிமை விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் சுமார் 6700 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஆப்பிள் கோரியுள்ளது.

எட்டு ஆண்டு கால பிரச்சனையில் இம்முறை ஆப்பிள் நிறுவனம் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6700 கோடி) தொகையை சாம்சங் நிறுவனத்திடம் காப்புரிமை பிரச்சனைக்கான இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியுள்ளது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் 54.8 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்கியிருக்கும் நிலையில் மீதமிருக்கும் 39.9 கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனம் கேட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் இரண்டு காப்புரிமை மீறல்கள்: அதாவது அமெரிக்க காப்புரிமை எண் D618,677 மற்றும் அமெரிக்க காப்புரிமை எண் D593,087 சார்ந்தது ஆகும். இதன் முதல் காப்புரிமை ஐபோனின் முன்பக்கம் கருப்பு நிற செவ்வக பகுதியையும், இரண்டாவது காப்புரிமை பெசல்கள் என அழைக்கப்படும் ஸ்கிரீனை சுற்றியிருக்கும் சிறிய பகுதிகளை சார்ந்தது ஆகும்.

காப்புரிமை சார்ந்த வழக்கு விசாரணையில் ஆப்பிள் நிறுவன வழக்கறிஞர் ஆப்பிள் ஐபோன்களில் வடிவமைப்பும் முக்கியத்துவம் வாயந்த அம்சம் என தெரிவித்திருந்தார். ஆப்பிள் பிரான்டு வடிவமைப்பு புரட்சிகரமானது என்றும் அவர் வாதாடினார். 2012-ம் நடைபெற்ற வழக்கின் போது ஆப்பிள் நிறுவனம் சார்பில் 275 கோடி டாலர்கள் இழப்பீடு கோரப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 105 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.

பின் பல்வேறு மேல்முறையீடுகளில் சாம்சங் நிறுவனம் 45 கோடி டாலர்களை செலுத்த உத்தரவிடப்பட்டது. மீதம் இருந்த 100 கோடி டாலர்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் ஆப்பிள் நிறுவனம் இறுதியாக 54.8 கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனத்துக்கு சாம்சங் வழங்க வேண்டும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் சார்பில் சாம்சங் சுமார் 39.9 கோடி டாலர்களை வழங்க வேண்டும் என வாதாடி வருகிறது. முதல் காப்புரிமை ஒட்டுமொத்த மொபைல் போன் சார்ந்தது என்பதால் 100 கோடி டாலர்களை சாம்சங் வழங்க வேண்டும் என ஆப்பிள் கேட்டுள்ளது. ஆனால் சாம்சங் சார்பில் 2.8 கோடி டாலர்களை மட்டுமே வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.