ஜிம்பாப்வேயில் வருகிற 4-ந்தேதி உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று தொடர் தொடங்குகிறது. இதற்கு முன் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. உலகக்கோப்பைக்கு தகுதி பெற வேண்டிய கட்டாயம் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணி கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், லெவிஸ், பிராத்வைட், ஜேசன் ஹோல்டர் ஆகியோருடன் முழு பலத்துடன் களம் இறங்குகிறது.

டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடி மன்னர்கள் கிறிஸ் கெய்ல், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கெய்ல் 16 ரன்கள் எடுத்த நிலையிலும், லெவிஸ் 10 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹெட்மையர் 20 ரன்னிலும், சாமுவேல்ஸ் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்தவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் ஒற்றையிலக்க ரன்னோடு வெளியேற்றினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 33.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 115 ரன்னில் சுருண்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பந்து வீச்சாளர் இம்ரான் ஹைதர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். பின்னர் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

தகுதிச்சுற்றுக்கான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் உடன் பபுவா நியூ கினியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் இடம்பிடித்துள்ளது.