இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண் ஆய்வு மையத்தில் இருந்து, 10 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-49 ரொக்கெட் இன்று பிற்பகல் இஸ்ரோவினால் விண்ணில் ஏவப்பட்டது.
பூமியை கண்காணித்தல், வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது, வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக செயற்கோள்களை இந்தியா விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது.அவற்றுடன் வெளிநாடுகளின் செயற்கைகோள்களையும் திட்டமிட்ட இலக்குகளில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி வரும் நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்கிறது.
தற்போது பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ரொக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த ரொக்கெட்டில் பூமியை கண்காணிக்கும் பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். ஒன்று என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது.இவற்றுடன் இந்த ரொக்கெட்டில் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைகோள்களையும் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதில் லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்குகின்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ரொக்கெட், செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.