இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நள்ளிரவில் மொத்தமாக மண்ணில் புதையவிருந்த 75 பேர்களை இளைஞர் ஒருவர் தனியாக காப்பாற்றிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் டோம்பிவ்லி பகுதியிலேயே இரண்டு மாடி குடியிருப்பில் வசித்து வந்த 75 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
வியாழக்கிழமை அதிகாலையில் இச்சம்பவம் டோம்பிவ்லி பகுதியில் நடந்துள்ளது.
18 வயதேயான குணால் மோஹித் பொதுவாக நள்ளிரவு கடந்து அதிகாலை வரை இணையத்தில் வெளியிடப்படும் நாடகங்களை கண்டு களித்து வருவதை வாடிக்கையாக கொண்டவராம்.
சம்பவத்தன்றும் குணால், வழக்கம் போல் இணையத்தில் மூழ்கி இருந்துள்ளார். அப்போது அவரது குடியிருப்பின் சமையலறை பகுதி திடீரென்று இடிந்து விழுந்துள்ளது.
சுதாரித்துக் கொண்ட குணால், உடனடியாக தமது குடும்ப உறுப்பினர்களை தூக்கத்தில் இருந்து எழுப்பியதுடன், எஞ்சிய குடியிருப்பாளர்களுக்கும் அவசர அவசரமாக தகவல் பகிர்ந்துள்ளார்.
இதனால் அந்த இரண்டு மாடி குடியிருப்பில் வசித்துவந்த மொத்த குடும்பமும் உயிர் தப்பியுள்ளது.
இல்லையெனில், குணால் உட்பட அங்குள்ள மொத்த குடும்பங்களும் மண்ணில் புதைந்திருப்பார்கள்.
தற்போது இடிந்து விழுந்துள்ள அந்த குடியிருப்பானது 9 மாதங்களுக்கு முன்னரே அதிகாரிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டு, வெளியேறும் காலக்கெடுவும் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அங்குள்ள மக்கள் வெளியேறாமல், கால தாமதம் செய்து வந்துள்ளனர். தற்போது அந்த இரண்டு மாடி குடியிருப்பு மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது.
மேலும், பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய மக்கள் என்பதால், அவர்களால் வேறு பகுதிக்கு குடிபெயர முடியாத சூழல் உள்ளதாகவும், அதனாலையே தற்போதும் அப்பகுதியில் அவர்கள் தங்கி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.