பிரான்ஸ் : உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் இரு காவல்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் ஐவர் சாவடைந்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த உலங்குவானூர்தி தென்கிழக்கு பிராந்தியமான Bonvillard (Savoie) நகரின் அருகே பறந்துகொண்டிருந்த நிலையில் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.
உலங்குவானூர்திக்குள் விமானி உட்பட மொத்தம் ஆறு பேர் இருந்துள்ளனர். அவர்களில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளனர். விமானி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாவடைந்த ஐவரில் இருவர் காவல்துறையினர் ஆவர். CRS அதிகாரிகளாக பணியாற்றும் Amaury L (Le capitaine) மற்றும் Stéphane L. (le brigadier) ஆகிய இரு காவல்துறையினரே சாவடைந்துள்ளனர். இருவரும் Auvergne-Rhône-Alpes மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது.
உலங்குவானூர்தி மிக ஆபத்தான செங்குத்தான மலைச் சரிவு ஒன்றுக்குள் சிக்குண்டுள்ளதாகவும், மீட்புப்பணிகள் பலத்த சிரமத்தின் மத்தியில் இடம்பெற்று வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குரிய காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
சாவடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், உள்துறை அமைச்சர் Gérald Darmanin ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று புதன்கிழமை உள்துறை அமைச்சர் Gérald Darmanin சம்பவ இடத்துக்கு நேரில் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.